25.9.2022 மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளி, உள் அரங்கில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் நடந்த கவியரங்கில்
செயலர் கவிஞர் இரா.இரவி தலைமை வகித்தார். முனைவர் வரதராசன், கவிஞர்கள் இரா.கல்யாண சுந்தரம், கு.கி.கங்காதரன், ஆகியோர் முன்னிலை
வகித்தனர். கவிஞர்கள் புலவர் மகா. முருகபாரதி, குறளடியான், பால்
பேரின்பநாதன், அஞ்சூர்யா க.செயராமன், லிங்கம்மாள்,
முனைவர் வரதராசன், இரா.கல்யாண சுந்தரம்,
மா.வீரபாகு, சங்கர நாராயணன், மு.இராமபாண்டியன், சே.அனுராதா, நா.குருசாமி, பொன்பாண்டி, கு.கி.கங்காதரன்,
எ.அலகையா, சாந்தி திருநாவுக்கரசு, உள்ளிட்டோர் வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு என்ற தலைப்பில் கவிதை பாடினார்கள். கவிதாயினி செ.அனுராதா எழுதிய மதுரை
மாநகர் சிறப்பு கண்ணோட்டம் நூலும், கவிதாயினி சாந்தி திருநாவுக்கரசு எழுதிய
யாப்பியக்கதிர்கள் ஹைக்கூ (கவிஞர் இரா .இரவி அணிந்துரை நல்கிய நூல்) நூலும்
வெளியிடப்பட்டன. நூல் ஆசிரியர்கள் வருகை தந்த அனைவருக்கும் நூல்களை அன்பளிப்பாக
வழங்கினார்கள். படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் சம்பத் கை வண்ணம். புகைப்பபடக் கலைஞர்
ஏற்பாடு மதுரைஉலா ரெ.கார்த்தி கேயன். அரங்கம் தந்து உதவியவர் புரட்சிக் கவிஞர்
மன்றத்தின் தலைவர் பி.வரதராசன்.அவர்கள்...
வள்ளுவத்தின்
தமிழ்ப்பண்பு
கவிஞர் இரா.இரவி
ஒருவனுக்கு ஒருத்தி
என்ற தமிழ்ப்பண்பாட்டை
ஓதியது ஒழுக்கத்தை
உயிருக்கு மேலாகக் கூறியது
உனக்கு தீங்குசெய்த
பகைவனும் வெட்கும்வண்ணம்
அவனுக்கு நன்மை
செய்யச்சொன்னது திருக்குறள்
மதுவைத் தொடாதே
மடையனாக மாறாதே
மதுவிலக்கை அன்றே
பாடிய அரிய நூல் திருக்குறள்
உயிர்களைக் கொல்லாதே
உயிர்கள் யாவும்
உன்னை கையெடுத்து
வணங்கும் - சொல்லியது திருக்குறள்
பெற்ற உதவி
சிறிதானாலும் மறக்காதே என்றும்
செய்த உதவி
பெரிதானாலும் மறந்திடு – திருக்குறள்
வையத்துள் வாழ்வாங்கு
வாழ்ந்திட வழிவகை
வழங்கிய உயர்ந்த நன்மறை
– நம் திருக்குறள்
கல்வியை கசடுகள்
அற்றுக்கற்று அதன்வழி
கற்றவழியே வாழ்வில்
நடக்க உரைத்தது – திருக்குறள்
உலக மனிதர் யாவரும்
சமம் என்று அன்றே
ஓங்கி உரைத்த
ஒப்பற்ற உயர்மறை – திருக்குறள்
உயர்ந்தவர்
தாழ்ந்தவர் மனிதரில் இல்லவே இல்லை
உரக்க உரைத்த
உயர்ந்த மாபெரும் திருக்குறள்
சாதிமத வேறுபாடுகள்
யாரிடமும் பார்க்காதே
சகோதர உணர்வுடன்
பழகிடச் சொன்ன திருக்குறள்
மனிதநேயத்தை
உலகிற்கு கற்பித்தது திருக்குறள்
மனிதனை மனிதன்
மதிக்க வைத்தது திருக்குறள்
தேசப்பிதா
காந்தியடிகள் போற்றியது திருக்குறள்
தேசமே போற்றி
மகிழ்ந்திடும் திவ்யமான திருக்குறள்
*****
வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்
அணுவுக்குள் அளவற்ற ஆற்றலே அதிசயம்
பூவுக்குள் தேனை வைத்ததே இரகசியம்
விதைக்குள் மரத்தை அடக்கியதே மகிமை
குறளுக்குள் தமிழ்ப்பண்பு தாங்கியதே பெருமை
மலரைக் கசிக்கினால் மணத்தை நுகரலாம்
முக்கனிச் சாற்றால் இனிமை சுவைக்கலாம்
தங்கத்தை உரசினால் தரத்தைக் காணலாம்
திருக்குறளை அலசினால் தமிழ்ப்பண்பு அறியலாம்
வந்தாரை 'வா'வென்று வரவேற்கும் 'விருந்தோம்பல்'
வறியவருக்குத் 'தா'வென்று உணர்த்தும் 'ஈகை'
உயிர்களை அரவனைக்கச் சொல்லும் 'அன்புடைமை'
இறைவனை அடைய வழிகாட்டும் 'மெய்யுணர்தல்'
கற்றபடி கடைபிடிக்கச் சொல்லும் 'கல்வி'
அறநெறியால் இன்பத்தைக் காட்டும் 'வெஃகாமை'
உண்மைக்கு உறுதுணையாய் நிற்கும் 'வாய்மை'
சொல்லின் திறத்தை வழங்கும் 'சொல்வன்மை'
மனித வாழ்வின் தரமுயர்த்தும் அறத்துப்பால்
பொறுப்புகளை எடுத்துக் காட்டும் பொருட்பால்
உயிர்களின் படைப்பினை விளக்கும் இன்பத்துப்பால்
முப்பாலில் தமிழ்ப்பண்பு மிகுந்துள்ளதே உண்மை.
********
***********