Thursday, June 8, 2023

28.5.2023 மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் 11- "அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும்"

 28.5.2023 அன்று, காலை 10 மணி அளவில், .மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் விழா நடந்தது.  மாமதுரைக் கவிஞர் பேரவை செயலர் கவிஞர் இரா.இரவி அனைவரையும் வரவேற்றார்.  "அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும்" என்ற தலைப்பில் பின்வரும் கவிஞர்கள் இரா. கல்யாணசுந்தரம், இரா.இரவி, கு.கி.கங்காதரன், முனைவர் வரதராசன், அஞ்சூர்யா க.செயராமன், கி.குறளடியான், புலவர் முருகுபாரதி, மா.வீரபாகு, ச.லிங்கம்மாள், சாந்தி திருநாவுக்கரசு, எம்.இராம.பாண்டியன், செ.அனுராதா, மா.முனியாண்டி, மு.இதயத்துல்லா, கோ.சங்கரநாராயணன்,  அ.அழகையா, குருசாமி, பெரி.கரு.சம.சமயக்கண்ணன், மா .பரமானந்தம், குருமூர்த்தி ஆகியோர் கவிதை பாடினார்கள். 

சே.அனுராதா எழுதிய 'வாடாமல்லி' நூலும், நா குருசாமி எழுதிய 'வான்புகழ் வள்ளுவரின் வாழ்வியல் தத்துவங்கள்' நூலும் வெளியிடப்பட்டன . இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ண ம்.







அறம் சொல்லும் திருக்குறளே
அகிலம் காக்கும்

கவிஞர் இரா.இரவி

                      *****

அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும்
அறம் திருக்குறள் அளவிற்கு வேறு எதிலும் இல்லை!

பெற்ற தாய் பசியோடு வாடினாலும் என்றும்
பெரியோர் பழிக்கும் செயல் செய்யாதே என்றது!

பஞ்சமா பாதகம் செய்தேனும் தாய்பசி போக்கு என்றது
பழங்கால வேதம் சொன்னதை ஏற்காதது திருக்குறள்!

தீங்கு இழைத்த பகைவனும் வெட்கும்வண்ணம்
நன்மை செய்திடச் சொன்ன உயர்ந்த திருக்குறள்!

காந்தியடிகளின் அகிம்சைக்கு அறவாழ்வுக்கு அடித்தளம்
கற்கண்டு திருக்குறளே அவரே வழிமொழிந்தார்!

மாமனிதர் அப்துல்கலாமின் மகத்தான வாழ்விற்கு
மண்ணில் அடிப்படையாக இருந்ததும் திருக்குறளே!

பிறப்பொக்கும் எல்லா உயிரும் சமமென்ற திருக்குறள்
பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை என்ற திருக்குறள்!

பிறர்செய்த உதவியை மறக்காதே என்ற திருக்குறள்
பிறருக்கு செய்த உதவியை மறந்திடு என்ற திருக்குறள்!

ஏதையும் ஏன் எதற்கு எப்படி என்று கேட்டிட்ட திருக்குறள்
எதையும் ஆராய்ந்து ஏற்கச் சொன்ன திருக்குறள்!

யார் சொல்வது என்பது முக்கியமன்று என்ற திருக்குறள்
யார் சொன்னாலும் ஆராய்ந்து அறிந்திடு என்ற திருக்குறள்

வன்சொல் என்றும் பேசாதே என்ற திருக்குறள்
இன்சொல்லே என்றும் பேசிடு என்ற திருக்குறள்

திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை சிறக்கும்
திருக்குறள் வழி நடந்தால் உலகம் உய்க்கும்!

                        ******************************



















அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும்

புதுக்கவிதை

கு.கி.கங்காதரன்

குறள் சொல்லும் அழகு 
அறம் காக்கும் உலகு
நித்தமும் செய்து பழகு 
நீங்கும் மனதில் அழுக்கு.

அறம் அன்பைச் சுரக்கும்
இன்ப வாழ்வைக் கொடுக்கும்
அழிக்கும் குணத்தைப் போக்கும்
அளவற்ற ஆசையை அடக்கும்

அறம் நேர்மையை வளர்க்கும்
ஆனந்தத்தை வாழ்வில் பெருக்கும் 
கொடும் கோபத்தைப் போக்கும்
கடுஞ்சொற்களை அறவே அகற்றும்

அறத்தை வெறுத்தால் துன்பம்
அறத்தை வளர்த்தால் இன்பம்
அறத்தைப் பழித்தால் வீழ்ச்சி
அறத்தை மதித்தால் மகிழ்ச்சி

அறம் செய்யம் எண்ணம் வேண்டும்
எண்ணும் அறத்தைச் செய்திட வேண்டும் 
செய்யும் அறத்தைத் தொடர வேண்டும்
தொடரும் அறமேஶ்ரீ அகிலத்தைக் காக்கும்


அறம் தீவிரவாதத்தை ஒழிக்கும்
எங்கும் அமைதியை உண்டாக்கும்
வாழ்வினைச் செழிக்கச் செய்யும்
வளமான எதிர்காலத்தைக் கொடுக்கும்.

                          *******************