Monday, November 27, 2023

26.11.2023 மாமதுரைக் கவிஞர் பேரவை- கவியரங்கம் 17- செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே - தமிழரின் தொன்மை- நூல் வழங்குதல்

                     26.11.2023 மாமதுரைக் கவிஞர் பேரவை- கவியரங்கம் 17- 

செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே














26.11.2023 அன்று காலை, மாதுரைக் கவிஞர் பேரவையின் சிந்தனைக் கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார்செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். புரட்சிக் கவிஞர் மன்றத்தின்  தலைவர் பி.வரதராசன் மூன்று கவிஞர்களுக்கு விருது வழங்கி சிறப்புரையாற்றினார்.  துணைத்தலைவர் முனைவர் இரா.வரதராசன்முன்னிலை .வகித்தார். மறைந்தும்  மறையாத கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில் அவரது மகன்  ஆதி சிவம் தென்னவன்  விருதுக் கேடயம் ஏற்பாடு செய்தும், மாமதுரைக் கவிஞர் பேரவைக்கு வழங்கியும், வாழ்த்துரையாற்றினார்.

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில் "செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே" என்ற தலைப்பில்கவியரங்கம்.நடந்தது. கவிஞர்கள் பேராசிரியர் சக்திவேல், இரா. இரவிமுனைவர் இரா .வரதராசன்இரா .கல்யாணசுந்தரம்மு .இதயத்துல்லா,( இளையாங்குடி ) , மு.க.பரமசிவம், பெரி . கரு .சம .சமயக்கண்ணு, கு .கி .கங்காதரன்கி. கோ.குறளடியான்ச .லிங்கம்மாள் செ.அனுராதா இராம பாண்டியன்சாந்தி திருநாவுக்கரசு  ஆகியோர் கவிதை   பாடினார்கள் .

சிறந்த  கவிதை வாசித்த  இரா .கல்யாணசுந்தரம் ச .லிங்கம்மாள் ,கு.கி. கங்காதரன் ஆகியோர்   புரட்சிக் கவிஞர் மன்றத்தின்  தலைவர் பி .வரதாசன் அவர்களிடமிருந்து விருது பெற்றனர்.

'தமிழரின் தொன்மை' என்ற நூலை வருகை தந்த அனைவருக்கும் கவிஞர் இரா .இரவி அன்பளிப்பாக வழங்கினார்.

படங்கள் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .

                                                       *************

 

 


செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே!

                    கவிஞர் இரா. இரவி

                                   *****

கிரேக்கம் இலத்தீன் அரபு சீனம் எபிரேயம்
பாரசீகம் உலக செம்மொழிகளில் சிகரம் தமிழ்!

செம்மொழிக்கான தகுதிகள் உள்ள மொழி தமிழ்
செம்மையாக நிலைத்து நிற்கும் தமிழ்மொழி

தனித்து இயங்கும் தன்மை உள்ள மொழி தமிழ்
தரணியில் பிறந்த முதல்மொழி தமிழ்

மொழிகளில் சிறந்த மொழி தமிழ் என்பதை
முன்மொழிந்து வருகின்றனர் மொழி ஆய்வாளர்கள்

இலக்கியம் இலக்கணம் உள்ள இனிய மொழி
எண்ணிலடங்கா கவிதைகள் உள்ள மொழி தமிழ்

என்று தோன்றியது என்று இயம்ப முடியாத
என்றோ தோன்றிய மூத்த மொழி தமிழ்

பன்மொழி அறிஞன் மகாகவி பாரதி பாடினான்
பாரினில் உள்ள மொழிகளில் இனிமை தமிழ் என்று

பேச்சுவழக்கில் இல்லாத சமஸ்கிருதத்தை
செம்மொழி தான் என்று கோடிகள் விரையம்

உண்மைச் செம்மொழியான தமிழ்மொழிக்கு
உணர்வுடன் செலவு செய்ய முன்வருவதில்லை

தமிழின் புகழை மேடையில் புகழ்வார்கள்
தமிழுக்கு நிதி ஒதுக்கிட மனமில்லை ஒன்றிய அரசுக்கு

தமிழ்மொழி உச்சரிக்காத நாடில்லை உலகில்
தரணிஎங்கும் பரவி ஒலிக்கும் மொழி தமிழ்

சிறிதும் ஐயம் கொள்ள வேண்டவே வேண்டாம்
செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே!

                                                                    *********







மாமதுரைகவிஞர் பேரவை மதுரை சிந்தனைக் கவியரங்கம்:17

நாள்  26.11.2023

செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே !

முனைவர் மு க பரமசிவம் பேரையூர் மதுரை

 

அம்மைதந்த செந்தமிழாய் அகிலமெங்கும் போற்றும்மொழி!                 

செம்மைதந்த முதன்மைமொழி செம்மொழியில் உயர்ந்தமொழி  .       

எம்மைகாக்கும் இதயமொழி இனிமையாக்கும் ஏழிசைமொழி  .           

தம்மைவளர்க்கும் பெருமையிலே தேன்சுவையாக்கும் உலகமொழி!

 

அக்காலப் பெருமையிலேஅகரமுதல எழுத்தாகவும்.               

எக்காலப்புகழ் மணக்கும் ஏற்புடையநடையிருக்கும்  .                        

முக்காலமும் போற்றும் முத்தமிழின்பச் சுவையிருக்கும் .                

தற்காலமொழி இன்பத்திலேதனித்தப்புகழ் நிலைத்திருக்கும்!

 

அன்றுமுதலாக தனித்தோங்கும்ஆதிகாலமுதல் மொழிதமிழே  .                   

இன்மொழி சுவைவழங்கும் இனியதமிழ் சொல்விளங்கும்.               

என்றைக்கும் நிலைத்திருக்கும் எம்மொழியே உயிர்மொழியாகும்.      

பன்மொழியின் வளம்காக்கும் பழம்தமிழ் தேன்மொழியாகும்!

 

தாய்மொழிப் பெருமையாக்கும் தேசமெங்கும் ஏற்றமாக்கும் .         

நேயம்பொங்கும் பாண்டியவேந்தர் வளர்த்;ததமிழ்சங்கம்மொழி.          

ஆயக்கலை முழுவதிலும் அடக்கியாளும் முதன்மைமொழி

வாய்மையில் சிறந்தோங்கும் வளர்தமிழாக நெறி விளங்கும்!

 

பிறந்தமொழி அனைத்திற்கும் பெருமைதரும் தாய்மொழிதமிழே

திறந்தநிலைப் பெட்டகமாய் தேசமெங்கும் போற்றும்மொழி

முறையான இலக்கண இலக்கியமும் முக்காலமும் ஏற்றும்மொழி 

அறநெறிதவறாத ஆன்றோர்கள் போற்றும் அன்னைமொழி !

 

செம்மொழியில் சிறந்தமொழி சுவைதரும் தமிழ்மொழியே

இம்மொழிபோல் பூமிதனில் யாங்கணுமே எங்குமில்லையே

எம்மொழிபோல் இனியமொழி இறவாதபுகழ் படைக்கும்மொழி

தம்நிலைமாறாதப் புகழ்படைக்கும் தனியுரிமைச் செம்மொழித்தமிழே

 

தேய்பிறையாகும் பிறமொழியும் தாய்மொழியாகக் காக்கும்

வாய்மொழிச் சுவைதனில் வளம்தரும் திறனிருக்கும்

இயற்றமிழ் மொழிவளத்தில் இசைத்தமிழ் ஓசையிருக்கும்

நேயமுற்றமொழிக்களத்தில் நடனமாடும் நீதிமுறையிருக்கும் !

 

உலகமொழிவரலாற்றில் உண்மையானசெம்மொழிதமிழே

பலகலைவாழ்வியலில் பழம்பெரும் தொன்மைமொழி

வலம்வரும் மொழிக்கெல்லாம் வாழ்வுதரும் தென்பாண்டிமொழி

நிலமெங்கும் வாழுமிடம் நீதிநெறிகாக்கும் செம்மொழிதமிழே  !

 

இடம் : மதுரை

நாள்: 26.11.2023                        

முனைவர் மு க. பரமசிவம் பேரையூர்

கல்லுப்பட்டி மதுரை தமிழ்நாடு

இந்தியா -625703 அலைபேசி எண்; 97865 19558

 **************************************************

மாமதுரைக் கவியரங்கம்

நாள் : 26.11.2023 ஞாயிற்றுக்கிழமை

தலைப்பு : செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே

 

ஓசை ஒலியான ஓங்காரத் தமிழே !

வாசிக்கும் மூச்சே நேசிக்கும் தமிழே !

பேசும் மொழியாலே இயலானத் தமிழே!

பண்பாடும் வழியாலே இசையானத் தமிழே!

 

அகம் நாட தினம் அரங்கேறும் கூத்து நாடகத் தமிழே!

அகம் பேணும் அன்பு பூணும் அகமே இன்பத் தமிழே!

புறம் நீளும் பண்பு ஆளூம் மரபானத் தமிழே!

கோடும் குறியும் கொண்ட  அறமானத் தமிழே!

 

முதலில் பிறந்ததால் பழமைத் தமிழே!  

முழுமையில் சிறப்பதால் புதுமைத் தமிழே!

வளமையோடு வளர்வதால் இளமைத் தமிழே!

சுவைக்கும் உமிழால் சுரக்கும் இனிமைத் தமிழே!

 

முக்கனிச் சுவை கொண்டமூன்றாகும் முத்தமிழே!

ஆதியும் இல்லா அந்தமும் இல்லா அந்தாதித் தமிழே!

தாய்ப்பால் நிகராகும் தமிழ்ப்பால் தாய்த் தமிழே!

தன்னேரில்லா தலைமை நீதிபதி எங்கள் தமிழே!

 

தொல்காப்பிய இலக்கணம் வழி மொழிந்த

மொழிக் கோட்பாடு முப்பாலும் முழுதோதியவர்க்கு

தப்பாது வீடுபேறு வாய்த்திடும்

வான் புகழ் வள்ளுவர் தமிழே!

 

பேசும் தமிழாலே நீளும் உயிர் மூச்சு

வாழும் வழியாலே ஆளும் தமிழ் வீச்சு

சந்தமொடு தாளம் கூடக் கூட சிந்திடும் அமுதே

சிந்து நடை கோலம் போடப் போட முந்திடும் தமிழே

 

நானிலத்தில் நன்னிலத்தை நாடும் நற்றமிழே!

மாநிலத்தில் தனித்தியங்கும் மாத்தமிழே!

ஆயக் கலைகள் அறுபத்து நாலாகும் நூற்றமிழே!

எந்தமிழே!என்றுமுள செந்தமிழே! செம்மொழியே

 

 வாழிய செந்தமிழ் !

 வாழிய வாழியவே !

 கவிதையாக்கம்

 

சித்தாந்த ரத்தினம் எஸ் வி ஆர் மூர்த்தி

பெங்களூர் புலனம் : 9611226392

மின்னஞ்சல் :   moorthysvr753@gmail.com

                                                                                                                     ********

















செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே  
                     புதுக்கவிதை
                 கு.கி.கங்காதரன்

உயிருள்ள வரை மூச்சு இருக்குமாம் 
மூச்சுள்ள வரை பேச்சு இருக்குமாம்
பேச்சுள்ள வரை மொழி இருக்குமாம்
மொழியுள்ள வரை மனிதன் இருப்பானாம் 

தமிழாம் செம்மொழியாம் யாதிற்கும் முதலாம் 
தாங்கும் சிலையாம் துதிப்பாருக்கு விருந்தாம்  
தமிழர்களுக்கு அமிர்தமாம் பருக்கினால் இனிமையாம் 
தெற்கில் தோன்றியதாம் மொழிகளுக்கு விளக்காம் 

முன்னாளில் முத்தாய் முச்சங்கம் கண்டதாம் 
முருகன் என்னும் கடவுளின் வடிவழகாம் 
பன்மொழிப் பிடிகளில் சிக்காத தமிழாம்
பின்னாளும் பல்லாண்டு காலம் வாழுமாம்

செந்தமிழில் காணாத படைப்புகளே இல்லையாம் 
செம்மொழிக்கான தகுதிகள் சகலமும் உள்ளதாம் 
மொழிகளுள் செம்மொழியானது இந்நாளில் எட்டாம் 
மறையாமல் நிலைத்திருப்பது தமிழும் சீனமுமாம் 

செம்மொழிக்கான மூலங்கள் தமிழில் பலவாம் 
சமயச்சார்பின்மை தொன்மை அதில் சிறப்பாம் 
பண்பட்ட பழமை இலக்கியங்களின் களஞ்சியமாம் 
பிறமொழிச் சாராமல் தனித்து இயங்குமாம் 

உயர்சிந்தனை நடுநிலைமை படைப்புக்கு இலக்கணமாம் 
அறமோடு இலக்கியப் பொதுமையே ஆதாரமாம் 
கலை கலாச்சாரப் பண்பாட்டிற்கு அடித்தளமாம் 
கவிகளில் இத்தலைப்பு எங்கெங்கும் ஒலிக்குமாம் 
*************






























************************

2 comments:

  1. சிறப்பானத் தமிழுக்குச் செம்மையானப் பதிவு .
    அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அருமை வாழ்த்துகள்

    ReplyDelete