Monday, November 6, 2023

29.10.2023 மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் 16 - "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " - சிறந்த கவிதைக்கு விருது - கவிதை நூல் வெளியீடு

 29.10.2023 மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் - "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ", சிறந்த கவிதை வாசித்தோருக்கு விருது வழங்கல், முனைவர் வரதராசன் கவிதை நூல் வெளியீடு.  நாள் 29.10.2023. 

மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார் ,செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் முனைவர் இரா.வரதராசன், துணைச் செயலர் கு .கி .கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில்" என்ற தலைப்பில், கவியரங்கம்.நடந்தது கவிஞர்கள் இரா. இரவி, முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம், கு .கி .கங்காதரன், கி. கோ.குறளடியான், ச .லிங்கம்மாள்,  மு .இதயத்துல்லா,( இளையாங்குடி ) , பெரி . கரு .சம .சமயக்கண்ணு, அஞ்சூரியா க .செயராமன் ஆகியோர் கவி பாடினார்கள் . 

மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர் ,மறைந்தும்  மறையாத கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில் அவரது மகன்  ஆதி சிவம் தென்னவன்  வாழ்த்துரையாற்றி, விருது வழங்கினார் ..பொறுப்பாளர்கள் தவிர மற்ற கவிஞர்கள் பாடிய கவிதைகளில் சிறந்த மூன்று  கவிதை வாசித்தோருக்கு விருது வழங்கினார்கள் கவிஞர்கள் பெரி .கரு .சம .சமயக்கண்ணு, கி . கோ.குறளடியான்,அஞ்சூரியா க .செயராமன் ஆகிய மூவரும் "புரட்சித் தமிழ் முரசு" விருது பெற்றனர் .முனைவர் வரதராசன் எழுதிய "கவிஞன் பார்வையில் நடப்பும் நவீனமும் "" கவிதை நூல் வெளியிடப்பட்டது.  

படங்கள் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .












                                               
தினமலர் நாளிதழ் 31.10.2023

      மாமதுரைக் கவிஞர்  பேரவை , மதுரை 
 சிந்தனைக்  கவியரங்கம் -16 நாள் : 29.10.2023 
                 
 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 
                
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும்
 ஒரு நிறம் 
இறகு இரண்டோடு பறக்கும் இனமொன்றே! 
பழகு மொழி பேசும் கிளி
 பச்சைநிறம் -காலைப்
பொழுதைக் கூவியழைக்கும்
சேவல் வெள்ளை - மாலை
பொழுதை மயக்கும்  குரல் குயில் 
 கறுப்பு 
-வருமழை 
மேகம் கொண்டாடும் 
மயிலோ கலப்புநிறம் .
(8)
மலை ஆறுகள் மகிழ்ந்து குதித்தோடும் ! 
மண்ணை அரித்து மணலைக் 
 குவித்தாடும் !  
எண்ணம் போல்  வளைந்து 
 எழுந்தோடும் !
வண்ணம் பலக் குழைத்து 
 வழிந்தோடும் !
ஓடும் நிலத்தால் கொண்டது
 நிற(புற)  வேற்றுமை !
 கடலின் சங்கமத்தில் கண்டது ஒற்றுமை !
(12)
பிறப்பெடுத்த மொழிகள் பற்பல
 நூறாகும் !
உருவெடுத்த  நாடுகள் பற்பல
 வேறாகும் !
திரைகடல் ஓடி திரவியம் தேடி
வரப்பழித்தத்  தமிழர் !.

 யாதும் ஊரே ! யாவருங் கேளீர் !
 தீதும் நன்றும் பிறர் தர வாரா! 
வரையறுத்து வாழ்ந்த  
 பண்பட்டத்  தமிழர்! 
பெரியோரை வியத்தலும் இல்லை !
- அதனினும்
சிறியோரை இகழ்தலும் இல்லவே இல்லை ! (20)

ஓடி வரும்  நீராறு கூடுமிடம் கடல் சங்கமமாகும் 
பாடி வரும் காற்றோடு கூடிடும்தமிழ்ச் சங்கமமமாகும் 
பிறப்பொக்கும் மனிதர்கள் கூடும்
 சமூகச் சங்கமமமாகும் 
சிறப்பென்பது  சேர்ந்து 
வாழ்தலே சமநீதியாகும் ! (24)
✍️
சித்தாந்த ரத்தினம்  எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர் 
நாள் : 28.10.2023 
புலனம் : 9611226392


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!
           கவிஞர் இரா. இரவி

உலகில் பிறந்த யாவரும் சமம் என்று
ஓங்கி உரைத்தவர் ஒப்பற்ற திருவள்ளுவர்
உயர்ந்தவர் தாழ்ந்தவர் மனிதரில் இல்லை
உயர்வு தாழ்வு எல்லாம் தவறான கற்பிதங்கள்

நெற்றியில் பிறந்தவன் என்பதெல்லாம் கட்டுக்கதை
நெற்றிப் பொட்டில் அடித்துச் சொன்னவர் வள்ளுவர்
தோளில் பிறந்தவன் என்பதெல்லாம் புரட்டுக்கதை
தரணியில் பிறந்த யாவரும் சமம் என்றார்

ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் வகுத்திட்ட சதி
ஏற்றத்தாழ்வு இல்லவே இல்லை என்று உரைத்தார்
நம்ப முடியாத புரட்டுக்களை நம்பவே நம்பாதீர்
நமக்குள் சாதியை உருவாக்கியது சதி என்றார்

கற்பிக்கப்பட்ட கற்பனைகளை ஏற்காதீர் என்றார்
கட்டாயம் கேள்விகள் கேட்கச் சொன்னார் வள்ளுவர்
எதையும் ஏன், எதற்கு, எப்படி என ஆராய வைத்தவர்
எதையும் சிந்தித்து சீர் தூக்கி பார்க்கச் சொன்னவர்

யார் சொன்னாலும் சிந்திக்காமல் ஏற்காதே
எதையும் ஆராய்ந்து அறிந்திடு என அறிவுறுத்தியவர்
சாதி என்பதே சதி என்பதை உணர வைத்தவர்
சாதியை மறந்து சாதிக்க நம்மை வலியுறுத்தியவர்

தெய்வத்தால் முடியாதது கூட முயன்றால் முடியும்
தரணியில் முயற்சி திருவினையாக்கும் என்றவர்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பதை தவிடுபொடியாக்கியவர்
உலகில் மனிதர் யாவரும் சமம் வேறுபாடு இல்லை என்றவர்.
******






மாதுரை கவிஞர் பேரவை மதுரை                 

சிந்தனைக் கவியரங்கம் 29-10-2023

                    

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

          

அறம்சார்ந்த உயிரனைத்தும்,                

அன்புவழியில் நடைபயில ,                      

புறக்கடையில்  நுழைந்தே  ,                      

பகட்டாகும் சாதீயத்தீயாகிடுதே


பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும் ,              

பேதமை வேதனையாகுதே,
மறபுநிலை சீர்திருத்தம்,                        

மனமதுவே செம்மையானால்


தனதுநிலை உயர்வாகும்,                        

தினமதுவே மறைந்திடுமே  ,
மனதினிலே சமமானால்,                        

முத்தான செந்தமிழன்

                      

கல்வியெனும் ஒளிவிளக்கில் ,  

கலங்கரையாய் வழிகாட்டிடுமே,                

எல்லோரும் சமமென்றால்,                  

ஏற்றத்தாழ்வும் மறைந்திடுமே

வல்லமைதரும்  நல்வாழ்வும்,                  

வாழ்வியலில் நிலைத்திடுமே,
இல்லாத பொய்மைவாதம்,          

இருந்தநிலை  மறைந்திடுமே ,

பாடுகின்ற கவியரங்கம்,                    

புவியெங்கும் நிலையுயரும்,                  

ஓடுகின்ற நதிநீரும்,

ஒற்றுமைக்கு வழிகாட்டும்,                    

 

நீடுபுகழ்வாய்மை வெல்லும் ,                        

நல்லோர்களின் குடும்பப்பாசம் ,
ஆடுகின்ற மாற்றஙகளால்,                

அகிலமெங்கும் மனிதநேயமாக்குமே

 

முனைவர் மு.க பரமசிவம்,

பேரையூர் கல்லுப்பட்டி

மதுரைமாவட்டம், அலைபேசி, 97865 





        பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
                           புதுக்கவிதை 
                       கு.கி.கங்காதரன் 

தானாக எவ்வுயிரும் தோன்றுவதில்லை 
தனிமையால் எவ்வுயிரும் பிறப்பதில்லை 
உண்ணாமல் எவ்வுயிரும் வாழ்வதில்லை 
இறவாமல் எவ்வுயிரும் இருப்பதில்லை 

எவ்வுயிர்க்கும் பிறப்பதில் ஒற்றுமை உண்டு 
எவ்வுயிர்க்கும் வாழ்வதில் ஒற்றுமை உண்டு 
எவ்வுயிர்க்கும் இறப்பதில் ஒற்றுமை உண்டு 
இதில் எவ்வுயிர்க்கும் விதிவிலக்கு அன்று.

அண்டத்தில் அளவற்ற உயிர்களின் இருப்பு 
அதது அதனதன் பாணியில் பிறப்பு 
அரசனுக்கும் ஆண்டிக்கும் பேதம் இல்லை 
ஆனைக்கும் பூனைக்கும் மாற்றம் இல்லை 
 
ஆறு அமைதியாய் ஓடினால் ஆராதிப்பார் 
ஆற்றில் வெள்ளம் புரண்டால் அஞ்சுவார் 
ஆக்கச் செயல் செய்தால் புகழ்வார் 
அழிவுச் செயல் செய்தால் இகழ்வார் 

பாம்பை வீட்டில் வளர்க்க விரும்பார் 
பசுவை கடவுளாய் எண்ணித் துதிப்பார் 
நல்ல குணத்தால் ஏற்றம் பெறுவார் 
கெட்ட குணத்தால் இறக்கம் அடைவார் 

உயர்ந்தோர் தவறு செய்தால் குற்றமே 
தாழ்ந்தோர் நன்மை செய்யின் நன்றே  
தொழிலால் குணத்தால்  கிட்டும் உயர்வே 
பிறப்பால் வாழ்வால் எட்டாது சிறப்பே 

                        **********

படங்கள் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .
**********

2 comments:

  1. நனிநன்று. பாராட்டுகிறேன். கவிஞரே

    ReplyDelete
  2. வாழ்த்துகள்

    ReplyDelete