Friday, November 8, 2024

27.10. 2024 - மாமதுரைக் கவிஞர் பேரவை - சிந்தனைக்கவியரங்கம் 27 - பெண்கள் உலகின் கண்கள்

  





27.10. 2024 கவியரங்கம்

மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது.

" பெண்கள் உலகின் கண்கள்  " என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.

மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில்   " பெண்கள் உலகின் கண்கள்  "என்ற தலைப்பில்,  பேராசிரியர் தலைவர் சக்திவேல் தலைமையில்  சிந்தனைக் கவியரங்கம் நடந்தது.

மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம், மதுரை, வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழ்ச்செம்மல் செயலர் கவிஞர் இரா.இரவி  வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். புரட்சிப்பாவலர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் முன்னிலை உரையாற்றி விருதுகளை வழங்கினார்.

கவிஞர்கள் முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம் ,இரா .இரவி ,  புலவர் மகா . முருகு பாரதி,  ச. லிங்கம்மாள்,அனுராதா  இதயத்துல்லா ( இளையாங்குடி ), தென்காசி   புலவர் ஆறுமுகம் , இராமபாண்டியன் , பா.பழனி,  முனியாண்டி, பொன் பாண்டி ,  இந்தி ஆசிரியர் ம .வேல்பாண்டியன் முனைவர் சு .நாகவல்லி   ஆகியோர் கவிதை பாடினார்கள்.

மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர், மறைந்தும் மறையாத கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில், அவரது மகன் ஆதி சிவம் தென்னவன் கொடுத்து அனுப்பிய  விருதுகளை, சிறப்பாக கவிதை பாடிய கவிஞர்கள் இராமபாண்டியன் ,அனுராதா இருவரும் விருது  பெற்றனர்.

துணைத்தலைவர் முனைவர் வரதராஜன்  நன்றி கூறினார்.  

பார்வையாளர்களாக விரிவுரையாளர் அதி வீர பாண்டியன்,  தலைமையாசிரியர் மோகனக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கவியரங்கம் நடத்த மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் இப்பள்ளியின் தாளாளர்,  மன்றத்தின் தலைவர்   பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள்.  

இருவர் வர இயலாத காரணத்தால் துணைச்செயலர் கு.கி.கங்காதரன் கவிதையை பேராசிரியர் சக்திவேலும்,குறளடியான் கவிதையை பொன்.பாண்டியும் வாசித்தனர் .

படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்...





                    பெண்கள் உலகின்  கண்கள்

                        -    கவிஞர் இரா. இரவி

                                                   ***


பெண்  இல்லையேல் யாரும் இல்லை
பெண்ணே உலகின் மூலம் - உண்மை

ஆறை நூறு ஆக்குபவர்கள் பெண்கள்
அழகாக சேமித்து வைப்பவர்கள் பெண்கள்

ஆணைவிட அறிவாளி தான் பெண்கள்
அற்புதமாக சிந்திக்கும் ஆற்றல் மிக்கவர்கள்

பெண்கள் இல்லாத துறையே இல்லை
பெண்கள் அனைத்திலும் சாதித்து வருகின்றனர்


தானியும் ஓட்டுவர் விமானமும் ஓட்டுவர்
தன்னிகரில்லா ஆற்றல் மிக்கோர் பெண்கள்

விண்ணிற்கும் சென்று வந்தனர் பெண்கள்
விண்முட்டும் புகழைப் பெற்றவர் பெண்கள்


பெரியார் கண்ட புதுமைப்பெண்கள் பாரீர்
பாரதியார் கண்ட புதுமைப்பெண்கள் பாரீர்

புதுமைகள் புரிவதில் முன்நிற்கும் பெண்கள்
புரட்சிகள் நடத்திடும் போராட்டப் பெண்கள்

ஆணாதிக்கத்தை அடித்து நொறுக்கி விட்டனர்
அடிமைவிலங்கை தகர்த்து எறிந்து விட்டனர்

வாய்ப்பு வழங்கினால் சாதனை புரிவார்கள்
வழங்கிய வாய்ப்பில் முத்திரை பதித்தவர்கள்


தலைமைப் பொறுப்பிலும் தலைசிறந்து உள்ளனர்
தன்னிகரில்லா திறமைகள் மிக்கவர்கள் பெண்கள்

பெண்களுக்கு பொறுமையும் உண்டு, பொங்கியும் எழுவார்கள்
பெண்கள் உலகின் கண்கள் மெய்யே.

********











                                  மாமதுரை கவிஞர் பேரவை
                  தலைப்பு: பெண்கள் உலகின் கண்கள்.
                         --------------------------------

பெண்கள் உலகின்
     கண்கள் என்றால்
உண்மை அல்லாது
    பொய்தனை உரைப்பேனோ ? 
மண்ணின் பெருமைக்
    காக்கும் மாதரசி
விண்மீனை ஒக்கும்
     மக்களைப் பெறுபவளே!
               &&&%%%%

 மங்கையர்க்கரசி என்பேனே.
      மணாளனுக்கு மனைவியாம்
பங்கயச் செல்வியாம்
     பெற்றோர்க்கே கணவனுடன்
சங்கமிக்கும் காமவல்லியாம்
    சண்டானுக்குக் காளிதேவியாம்
அங்கமெலாம் தங்கம்போல்
     அழகு மிளிரும் புன்னகையே

பூவையராய் பொழுது
      புலருமுன் விழித்தெழும்
பாவையராய் பாலமுதை
       பரிந்தூட்டும் அன்னையாய்
யாவையும் தன்னுள்
        அடக்கி இல்லாளாய்
தேவைக்கும் மிஞ்சி
        திகழும் பெண்ணே...

கவிபாரதி
என்.எஸ்.விஸ்வநாதன்.
மதுரை.
76398 41731.

*********










பெண்கள் உலகின் கண்கள்

புதுக்கவிதை 

கு.கி.கங்காதரன் 

நூற்றாண்டைக் கடந்த மகளிர் தினம் 
நம்பிக்கை ஊட்டும் நவீன யுகம் 
ஆண் பெண் உறவின் முன்னேற்றம் 
உலகம் காணும்  மற்றொரு பரிமாணம் 

பதுமைகளாய்க் காலம் கழித்தப் பெண்கள்
புதுமையாய் காலத்தை மாற்றும் பிறவிகள்
கைகட்டி வாய்மூடிக் கிடந்த காலங்கள்
கைதட்டி வரவேற்பாய் மாறிய கோலங்கள்

உலகின் கண்களுக்குத் தெரியாத மங்கைகள்
அக்னியாய்ப் பிறப்பெடுத்த புதுமைப் பெண்கள்
எங்கும் எத்துறையிலும் செய்யும் சாதனைகள்
உழைப்புக்குக் கிடைத்த  உன்னத விளைவுகள் 

பெண்ணில் புதைந்திருந்த அறிவுப் பெட்டகங்கள்
ஆண்களுக்கு அர்பணிக்கும் அரியச் செல்வங்கள்
குடும்பத்தை வழிநடத்தும் புத்திக் கூர்மைகள்
கோபுரமாய் அழகூட்டும்  உச்சிக் கலசங்கள்

நான் பாதி நீ பாதி  எனும் சமநோக்கு
நீட்சியாய் மாறியது இன்றைய முழக்கம்
உன்னுள் நான் ஒரு பாதி
என்னுள் நீ ஒரு பாதியாய்.

பெண்கள் உயர்ந்தால் வீட்டிற்கு நன்மை 
பெண்கள் மகிழ்ந்தால் ஆண்களுக்கு வளமை
கண்கள் இருப்பதால் அழகுக்குப் மகிமை
பெண்களைக் காப்பதால் உலகுக்குப் பெருமை ..
***************







































************************************