Monday, March 9, 2026

22.02.2026. மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம்- 43 - "முக்கடல் சங்கமத்தில் முப்பால் நாயகன்"

  



22.02.2026. மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம்- 43

மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம், மதுரை, வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் &தொடக்கப் பள்ளியில் நடந்தது.

"முக்கடல் சங்கமத்தில் முப்பால் நாயகன்"  எனும்  தலைப்பில்  கவியரங்கம் நடந்தது.

 தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

முனைவர் வரதராசன் தலைமையில் கவியரங்கம் நடந்தது. ஆலோசகர்  வீர ஆதிசிவத் தென்னவன் வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா. கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். துணைச்செயலர் கு.கி. கங்காதரன் நன்றி கூறினார் .

முனைவர் வரதராசன் தலைமையில் கவிஞர்கள், இரா.கல்யாணசுந்தரம், கு.கி. கங்காதரன், கு.பால் பேரின்பநாதன், கி.கோ.குறளடியான்,  இளையாங்குடி இதயத்துல்லா, பா.பழனி, மா.முனியாண்டி, கவிதாயினி ச.லிங்கம்மாள்,  ஆகியோர் கவிதை பாடினார்கள். செயலர் தமிழ்ச் செம்மல் இரா.இரவி அவர்கள் வராத காரணத்தினால், அவரது கவிதையை கவிஞர் கு.கி.கங்காதரன் அவர்கள் பாடினார்.

பேரவையின் சார்பில் சிறப்பாக கவிதை பாடிய கவிஞர் இளயாங்குடி இதயத்துல்லா அவர்களுக்கு, திரு வீர ஆதிசிவத் தென்னவன் அவர்கள், பொன்னாடைப் போர்த்தி முனைவர் வரதராசன்  எழுதிய நூல் பரிசாக வழங்கி கவிமாமணி தென்னவன் நினைவு விருதும் வழங்கினார்.
 
நமது கவியரங்கம் நடத்துவதற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை இலவசமாகத் தந்து உதவும் புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு அனைவரும் நன்றி கூறினார்கள் .

 படங்கள் புகைப்படக் கலைஞர், ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .
**********

முக்கடல் சங்கமத்தில் முப்பால் நாயகர்!
- கவிஞர் இரா. இரவி

முப்பது அடி உயரமான பாறையில் நூற்றி முப்பத்தி மூன்று அடி!
முப்பால் 133 திருக்குறள் அதற்கு ஒப்பாக வள்ளுவர் சிலை!
சுற்றுலாப் பயணிகளைச் சுண்டி இழுக்கும் சுந்தரச் சிலை!
சுற்றி வளைக்கும் சுனாமியே விலகிச்சென்றது திருவள்ளுவரிடம்!

சுனாமி வந்தபோது அனைவரையும் புரட்டிப்போட்டது!
சும்மா விட்டுச்சென்றதுஅய்யன் திருவள்ளுவர் சிலையை!
வடக்கே இமயமலை எல்லை என்றால்!
தெற்கே திருவள்ளுவர் சிலை எல்லை என்றானது!

விவேகானந்தர் பாறை என்று விழித்தனர் அன்று!
திருவள்ளுவர் பாறை என்று விழிக்கின்றனர் இன்று!
கலைஞரின் ஏற்பாட்டில் கணபதி சிற்பி வடித்தார்!
காண்போரின் உள்ளத்தில் பிரமிப்பை விதைத்து வென்றார்!

இருபத்தி ஐந்து ஆண்டுகளாக உயர்ந்து நிற்கும் கம்பீரம்!
இரண்டாயிரம் ஆண்டு ஜனவரி ஒன்றில் திறக்கப்பட்ட 38 அடியில் அறம் பீடம் பொருள், இன்பம் 95 அடி பீடம் கொண்ட சிலை!
ஆக மொத்தம் 133 அடியில் அமைக்கப்பட்ட பிரமாண்டம்!

இந்தியாவின் முதல் கண்ணாடிப் பாலம் திறக்கப்பட்டது!
இந்தியாவே வியந்து பார்த்து ரசித்து வருகின்றது!
படகு சவாரி செய்துவிட்டு பார்ப்பது பரவசம்!
பார் போற்றும் திருக்குறளை எழுதியவருக்கு வானளாவிய சிலை!

காகம் அமர சிலை வைப்பர், கலைஞர் அமைத்தது “மேகம் அமர சிலை!
காவியக் கவிஞர் வாலி பொருத்தமாகப் பாடினார் அன்று !
உலகம் உள்ளவரை திருக்குறள் என்றும் வாழும்!
உலகம் உள்ளவரை திருவள்ளுவர் சிலையும் வாழும்!

••••••













*முக்கடல்சங்கமத்தில்* 
 *முப்பால் நாயகன்*


மூன்று தமிழ் தோன்றும் இடம் 
 *முக்கடல்* சங்கமம் !
மூன்று  தமிழ் வளர்ந்த இடம்
 *முச்சங்கச்* சங்கமம் !
மூன்று தமிழ் வளர்த்தவர்கள் 
 *மூவேந்தர்* 
சங்கமம் 
 *மூன்று தமிழ்* வளர்க்கும் மதுரை 
முத்தமிழ்ச் சங்கமம் (4)

ஆரியப் படை கடந்த *நெடுஞ் செழியன்* 
நேரிய நிர்வாகத்தில் மதுரை 
 *மீனாட்சி* 
அரசாளும் கோயில் பொற்றாமரைக் குளத்தில் 
அரங்கேற்றம் ஆனது *திருக்குறள்* *முப்பால்* !(8)

 *ஆவுடையப்பன்* *சொக்கநாதர்* 
மேவு   புகழ் *மீனாட்சி* *அம்மை* 
தேமதுர தமிழோசை தினம் 
ஓங்கி ஒலிக்கும்! 
மாமதுரை *அறம்* வளர்க்கும் 
தூங்கா நகரம்! (12)

நாளும் இரவும் நடக்கும் 
வணிகம்! 
சேரும் *பொருள்* சிறக்கும் 
நகரம் !
கூடும் *இன்பம்* ஆடல் பாடல்  
அரங்கம் !
தேடும் மூன்றும் கூட்டும் 
 *தமிழ்ப் பால்!* (16)


எங்கள் *ஆசுகவி*   தொடங்கிய 
 *கவியரங்கம்!* 
திங்கள் தோறும் அரங்கேறும் 
 *கவியரங்கம்!-* *மாமதுரை* 
சங்கத் தமிழ்ப் பலகை 
 *கவியரங்கம்* ! - 
தங்கத் தமிழை  தாங்கும் 
 *புவியரங்கம்*  !(20)

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்  
சீராரும் 
 *குமரித் தாய்* 
பாதம் தனிலே - தமிழ் 
வேரோடும் முப்பால் தந்த
 *வள்ளுவன்* *சிலையே!* 
சீரோடு முழுதொலிக்கும் 
சிறப்பானக்  *குறளலையே* !(24)

✍️
சித்தாந்த ரத்தினம் 
 *எஸ் வி ஆர் மூர்த்தி* 
பெங்களூர் 
21.02.2026

***********

தலைப்பு: முக்கடல் சங்கமத்தில் முப்பால் நாயகன்
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன் 


முத்தான முப்பாலை வித்தாக விதைத்தவர் 
மூப்பிலாச் செந்தமிழை சொத்தாகக் அளித்தவர் 
பாக்களில் கூர்மையேற்றி ஈரடியில் அமைத்தவர்
பாரதத் தென்முனையில் சிலையாய் நிற்பவர் 

திருக்குறளில் இருப்பது 133 அதிகாரங்கள் 
திருவள்ளுவர் சிலையின் உயரமோ 133 அடிகள் 
எழுத்தாணி கொண்டு எழுதிய திருக்குறள்
ஒளியூட்டி வாழ்வை விளக்கும் விளக்குகள் 

முத்திசையில் முக்கடலில் முப்பாலைக் கலந்தவர் 
முத்தமிழின் தொன்மைக்கு சாட்சியாய் விளங்கியவர்
தமிழ்க்கடலில் நீந்துவதற்கு திருக்குறளைத் தந்தவர்
தமிழர்களின் அடையாளத்தை என்றென்றும் நிலைத்தவர் 

கலங்கரை விளக்கமாய் கல்லில் வடித்தச்சிலை 
குறள்களை நினைவூட்டும் அழியாத அழகுநிலை 
கதிரவன் கதிர்களில் அனைக்கும் இனியவேளை
காற்றின் போக்கில் நடனமாடும் கடலலை 

கடலின் அலைகளுக்கு ஓய்வே இல்லை
கரும்பில் இனிக்காத பக்கமே இல்லை
வாசத்தைத் தந்திடாதப் பூக்களே இல்லை
வாழ்க்கையைத் தொடாத குறள்களே இல்லை 

************

























*********


Thursday, February 12, 2026

25.01.2026. மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம்- 42 -SINTHANAI KAVI ARANGAM -42 ஏற்றமிகு சங்கத்தமிழ் என்றும் முழங்கட்டும்

 


25.01.2026. மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம்- 42

மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம், மதுரை, வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் &தொடக்கப் பள்ளியில் நடந்தது.

"ஏற்றமிகு சங்கத்தமிழ் என்றும் முழங்கட்டும்எனும்  தலைப்பில்  கவியரங்கம் நடந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி தலைமையில் கவியரங்கம் நடந்தது.ஆலோசகர்  வீர அதிசிவத் தென்னவன் வரவேற்றார் .பொருளாளர் கவிஞர் இரா . கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார் .துணைச்செயலர் கு .கி . கங்காதரன் நன்றி கூறினார் .

கவிஞர் இரா .இரவி  தலைமையில் கவிஞர்கள் ,இரா.  கல்யாணசுந்தரம் ,கு .கி . கங்காதரன் ,கு .பால் பேரின்பநாதன் , கி .கோ .குறளடியான் , அ.அழகையா, இளையாங்குடி இதயத்துல்லா , பா .பழனி,மா,முனியாண்டி,அரங்க கிரிதரன் ஆகியோர் கவிதை பாடினார்கள்.

பேரவையின் சார்பில் சிறப்பாக கவிதை பாடிய கவிஞர்கள் முனியாண்டி,அரங்க கிரிதரன் இருவருக்கும் பொன்னாடைப் போர்த்தி தமிழறிஞர் அழகுராசன் வழங்கிய திருக்குறள் முனுசாமி எழுதிய திருக்குறள் உரை நூல்,முனைவர் வரதராசன்  எழுதிய நூல் பரிசாக வழங்கி கவிமாமணி தென்னவன் நினைவு விருதும் வழங்கினார்கள் .

கவியரங்கம் நடத்துவதற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை இலவசமாகத் தந்து உதவும் புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு அனைவரும் நன்றி கூறினார்கள் .

படங்கள் புகைப்படக் கலைஞர் ,ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .

**********



தினமலர் 2026 ஜனவரி 27 இதழ்  










ஏற்றமிகு சங்கத்தமிழ் என்றும் முழங்கட்டும்!

-    கவிஞர் இரா. இரவி

 *****

 எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றாகட்டும்

எம் உயர்நீதிமன்றத்திலும் தமிழ் ஒலிக்கட்டும்!

கடவுளின் கருவறையில் தமிழே வேண்டும்

கண்டமொழி விடுத்து கனித்தமிழ் முழங்குக!

 

தமிழர்கள் சந்தித்தால் தமிழில் உரையாடுவோம்

தமிங்கில உரையாடலுக்கு முடிவுரை எழுதுவோம்!

என்ன வளம் இல்லை நம் தமிழ்மொழியில்

ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில்!

 

உலகில் முதல்மொழி தமிழே என்று

உலகமே உரக்க உரைத்து வருகின்றது!

கீழடி காட்டியது தமிழின் உச்சம்

கீழடி உயர் நாகரீகத்தின் எச்சம்!

 

அறிக்கையை வெளியிட மறுப்பது ஏனோ ?

அறிஞர் அமர்நாத்திடம் மாற்றிக் கேட்பது முறையோ?

மூத்தகுடி தமிழ்க்குடி என்பதை உங்களுக்கு

முன்மொழிய அச்சம் வருவது ஏனோ?

 

சங்கத்தமிழின் பாடல் வரிகள் எல்லாம்

சான்றாக உள்ளன உயர்ந்த கீழடியில்!

 இரும்பை உருககும் உலைகள் கண்டவன்

இனிய தமிழை சுடுமண்ணில் பதித்தவன்!

 

நவீன கழிவறைகள் கட்டி வாழ்வாங்கு வாழ்ந்தவன்

நவீன நவமணி மாலைகள் செய்தவன் தமிழன்!

ஏற்றமிகு சங்கத்தமிழ் என்றும் முழங்கட்டும

எம் தமிழுக்கான தடைகள் தவிடுபொடியாகட்டும்!

 **********


ஏற்றமிகுசங்கத் தமிழ்

எங்கள் மொழிஎன்றும் ஒளிரும்

தங்கம் எனஅதுமிளிரும்

வாழும் உலகில் வயோதிகம் காணாதது

வந்தோரெல்லாம் கற்றுஉவக்கஅதுவாழுது

பன்னிருகைவேலனைபாடியமொழி

குன்றிலிருக்கும் அவனைகுறிஞ்சிகொண்டாடியது

பறம்புநாட்டிலேபகைவரொழிக்க

பயன்பட்டமொழி 

பாவலர் கூத்திலும் 

பாடியகாவடிச் சிந்திலும்

கூறினமொழி தளராதவளர்ச்சி

பெற்றுபெருநாடெல்லாம் இருக்கை

பெற்றுதிகழுது 

ஆன்றோர் சான்றோர் இதைஅறியணும்!

தண்டமிழ் கற்றுதரணியில் ஒளிர

புண்புநிறைமாந்தராய் பரிமளிக்க

நாம் கற்போம் நம்தமிழைநன்கே!

வேற்றுமொழி இங்குவந்து

வேதனையைத் தரவேண்டாம்

வீரம் கொண்டமொழிதமிழ்

மூவேந்தர்களைக் காத்தமொழிதமிழ்

வாழ்கதமிழ் என்றும் வாழ்க

எத்திக்கும் புகழ் பரப்பிஅதுவாழ்க!

அ.அழகையா

மதுரை 17

******














ஏற்றமிகு சங்கத்தமிழ் என்றும் முழங்கட்டும்

புதுக்கவிதை

கு.கி.கங்காதரன்

 

மலைபோல் உயர்ந்த செம்மொழி தமிழ்

மறையாமல் முழங்கும் எம்மொழித் தமிழ்

சங்கை ஊதினால் ஒலியாய் முழங்கும்

சங்கத்தமிழை ஓதினால் எங்கும் பரவும்

 

தமிழில் இருக்கும் நூல்களில் களஞ்சியம்

தனிமொழி பல்வகை உருவாகக் காரணம்

முச்சங்கம் முத்தமிழின் மூவகைப் பரிமாணம்

முக்காலமும் பொருந்தும் ஏற்றமிகு வளம்

 

நல்லதமிழை நான்கு பக்கங்களிலும் ஒலித்திட

நிறை தமிழைக் கணினியில் கற்றிட 

இணையத்தில் தமிழ் நூல்களைப் பதிவிட 

அறிஞர்கள் ஆர்வலர்கள் உதவ வேண்டும்

 

இசையில் தமிழை இசைத்திட வேண்டும்

இலக்கியத்தில் தமிழை வளர்த்திட வேண்டும்

கலையில் தமிழை நிலைத்திட வேண்டும்

பண்பாட்டால் தமிழை பரப்பிட வேண்டும்

 

அருந்தமிழ் அகிலத்தில் வலம் வந்தால் 

ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை கிடைக்கும் 

'அழியும் தமிழெனும்' கூற்று பொய்க்கும்

'அழியாது தமிழென' உறுதி கொடுக்கும்..

 

**************






















*****************************