25.01.2026. மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம்- 42
மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம், மதுரை, வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் &தொடக்கப் பள்ளியில் நடந்தது.
"ஏற்றமிகு சங்கத்தமிழ் என்றும் முழங்கட்டும்" எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி தலைமையில் கவியரங்கம் நடந்தது.ஆலோசகர் வீர அதிசிவத் தென்னவன் வரவேற்றார் .பொருளாளர் கவிஞர் இரா . கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார் .துணைச்செயலர் கு .கி . கங்காதரன் நன்றி கூறினார் .
கவிஞர் இரா .இரவி
தலைமையில் கவிஞர்கள் ,இரா. கல்யாணசுந்தரம்
,கு .கி . கங்காதரன் ,கு .பால் பேரின்பநாதன் ,
கி .கோ .குறளடியான் , அ.அழகையா, இளையாங்குடி
இதயத்துல்லா , பா .பழனி,மா,முனியாண்டி,அரங்க கிரிதரன் ஆகியோர் கவிதை பாடினார்கள்.
பேரவையின் சார்பில் சிறப்பாக கவிதை பாடிய கவிஞர்கள் முனியாண்டி,அரங்க கிரிதரன்
இருவருக்கும் பொன்னாடைப் போர்த்தி தமிழறிஞர் அழகுராசன் வழங்கிய திருக்குறள்
முனுசாமி எழுதிய திருக்குறள் உரை நூல்,முனைவர் வரதராசன்
எழுதிய நூல் பரிசாக வழங்கி கவிமாமணி
தென்னவன் நினைவு விருதும் வழங்கினார்கள் .
கவியரங்கம் நடத்துவதற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை இலவசமாகத் தந்து உதவும் புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு அனைவரும் நன்றி கூறினார்கள் .
படங்கள் புகைப்படக் கலைஞர் ,ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .
**********
தினமலர் 2026 ஜனவரி 27 இதழ்
ஏற்றமிகு சங்கத்தமிழ் என்றும்
முழங்கட்டும்!
- கவிஞர் இரா. இரவி
*****
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றாகட்டும்
எம் உயர்நீதிமன்றத்திலும் தமிழ்
ஒலிக்கட்டும்!
கடவுளின் கருவறையில் தமிழே வேண்டும்
கண்டமொழி விடுத்து கனித்தமிழ் முழங்குக!
தமிழர்கள் சந்தித்தால் தமிழில்
உரையாடுவோம்
தமிங்கில உரையாடலுக்கு முடிவுரை
எழுதுவோம்!
என்ன வளம் இல்லை நம் தமிழ்மொழியில்
ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில்!
உலகில் முதல்மொழி தமிழே என்று
உலகமே உரக்க உரைத்து வருகின்றது!
கீழடி காட்டியது தமிழின் உச்சம்
கீழடி உயர் நாகரீகத்தின் எச்சம்!
அறிக்கையை வெளியிட மறுப்பது ஏனோ ?
அறிஞர் அமர்நாத்திடம் மாற்றிக் கேட்பது
முறையோ?
மூத்தகுடி தமிழ்க்குடி என்பதை உங்களுக்கு
முன்மொழிய அச்சம் வருவது ஏனோ?
சங்கத்தமிழின் பாடல் வரிகள் எல்லாம்
சான்றாக உள்ளன உயர்ந்த கீழடியில்!
இரும்பை உருககும் உலைகள் கண்டவன்
இனிய தமிழை சுடுமண்ணில் பதித்தவன்!
நவீன கழிவறைகள் கட்டி வாழ்வாங்கு
வாழ்ந்தவன்
நவீன நவமணி மாலைகள் செய்தவன் தமிழன்!
ஏற்றமிகு சங்கத்தமிழ் என்றும் முழங்கட்டும
எம் தமிழுக்கான தடைகள் தவிடுபொடியாகட்டும்!
ஏற்றமிகுசங்கத் தமிழ்
எங்கள் மொழிஎன்றும் ஒளிரும்
தங்கம் எனஅதுமிளிரும்
வாழும் உலகில் வயோதிகம் காணாதது
வந்தோரெல்லாம் கற்றுஉவக்கஅதுவாழுது
பன்னிருகைவேலனைபாடியமொழி
குன்றிலிருக்கும் அவனைகுறிஞ்சிகொண்டாடியது
பறம்புநாட்டிலேபகைவரொழிக்க
பயன்பட்டமொழி
பாவலர் கூத்திலும்
பாடியகாவடிச் சிந்திலும்
கூறினமொழி தளராதவளர்ச்சி
பெற்றுபெருநாடெல்லாம் இருக்கை
பெற்றுதிகழுது
ஆன்றோர் சான்றோர் இதைஅறியணும்!
தண்டமிழ் கற்றுதரணியில் ஒளிர
புண்புநிறைமாந்தராய் பரிமளிக்க
நாம் கற்போம் நம்தமிழைநன்கே!
வேற்றுமொழி இங்குவந்து
வேதனையைத் தரவேண்டாம்
வீரம் கொண்டமொழிதமிழ்
மூவேந்தர்களைக் காத்தமொழிதமிழ்
வாழ்கதமிழ் என்றும் வாழ்க
எத்திக்கும் புகழ் பரப்பிஅதுவாழ்க!
அ.அழகையா
மதுரை 17
ஏற்றமிகு சங்கத்தமிழ் என்றும்
முழங்கட்டும்
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்
மலைபோல் உயர்ந்த செம்மொழி தமிழ்
மறையாமல் முழங்கும் எம்மொழித் தமிழ்
சங்கை ஊதினால் ஒலியாய் முழங்கும்
சங்கத்தமிழை ஓதினால் எங்கும் பரவும்
தமிழில் இருக்கும் நூல்களில் களஞ்சியம்
தனிமொழி பல்வகை உருவாகக் காரணம்
முச்சங்கம் முத்தமிழின் மூவகைப்
பரிமாணம்
முக்காலமும் பொருந்தும் ஏற்றமிகு வளம்
நல்லதமிழை நான்கு பக்கங்களிலும்
ஒலித்திட
நிறை தமிழைக் கணினியில் கற்றிட
இணையத்தில் தமிழ் நூல்களைப் பதிவிட
அறிஞர்கள் ஆர்வலர்கள் உதவ வேண்டும்
இசையில் தமிழை இசைத்திட வேண்டும்
இலக்கியத்தில் தமிழை வளர்த்திட வேண்டும்
கலையில் தமிழை நிலைத்திட வேண்டும்
பண்பாட்டால் தமிழை பரப்பிட வேண்டும்
அருந்தமிழ் அகிலத்தில் வலம் வந்தால்
ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை கிடைக்கும்
'அழியும் தமிழெனும்'
கூற்று பொய்க்கும்
'அழியாது தமிழென'
உறுதி கொடுக்கும்..
**************






































