27.9.26 மாமதுரைக் கவிஞர் பேரவை சிந்தனைக் கவியரங்கம் .50.
"ஏடா தமிழா -உனக்கு இன்னும் உறக்கமோ ?
ஐம்பெரும் விழா
மாமதுரைக் கவிஞர் பேரவையின் நிறுவனர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு ,பேரவையும் ,புரட்சிப் பாவலர் மன்றமும் இணைந்து மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் &தொடக்கப்பள்ளியில் ஐம்பெரும் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது .பேரவையின் தலைமைப் பொறுப்பாளர் ஆதிசிவத் தென்னவன் அனைவரையும் வரவேற்றார் .செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .,புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பெரியார் நெறியாளர் பி .வரதராசன் அவர்கள் , சமூகசேவகர்கள் தியாகதீபம் பேரவை அ.பாலு , குடந்தை ரகுநாதன் ,சுற்றுச்ச்சுழல் பாதுகாவலர் மீ .இராமசுப்ரமணியன் ,நல்லாசிரியர் சு .நாகவள்ளி,துப்பாக்கி சுடுவதில் மாநிலஅளவில் வென்ற ச .பிரதீசு ராகவ் ஆகியோருக்கு பொன்னாடைப் போர்த்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.
கவிஞர் பா .பழனி எழுதிய " உறவுகள் பலவிதம் " கட்டுரை நூலை திருமதி வீர .செந்தாமரை சியாமளாதேவி வெளியிட பி .வரதராசன் பெற்றுக் கொண்டார். கவிவித்தகர் பொற்கைப் பாண்டியன் முன்னிலை உரையாற்றினார் ,நிலா இலக்கிய மன்றம் கவிக்குயில் இரா .கணேசன் ,மதுரை இலக்கிய பேரவையின் தலைவர் சண்முக திருக்குமரன் வாழ்த்துரை வழங்கினார்கள் .
சிந்தனைக் கவியரங்கம் .50.
பேரவையின் தலைவர் பேராசிரியர் சி .சக்திவேல் தலைமையில்
" ஏடா தமிழா -உனக்கு இன்னும் உறக்கமோ ? என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது .கவிஞர்கள் இரா .இரவி ,கு .கி .கங்காதரன் ,கி. கோ .குறளடியான் ,பொன்பாண்டி ,வீரபாகு ,அரங்ககிரிதரன் ,ரெஜினாபானு ,அ.முரளிதரன் ,கண்ணன் ,சோ .தமிழன்பன் ,கு பால் பேரின்பநாதன் ,ந .சுந்தரம் பாண்டி ,அ.அழகையா,சங்கரநாராயணன் ,ஜோ .மகாலட்சுமி மித்ரா ,பா .பழனி ,ச .லிங்கம்மாள் ,பா .ஜெயசீலன் ,அஞ்சூர்யா ஜெயராமன்,முகமது இப்ராஹிம் ,இந்திரா காந்தி ,நா .குருசாமி ,ச .ராஜஸ்ரீ ,சே .நிறைமதி ,பா .பிரசன்னா,முத்துராஜா ,இளையான்குடி இதயத்துல்லா ,முனியாண்டி ,கி .காயத்ரி ,முனைவர் ஸ்ரீவித்யா பாரதி ,கமலா சந்திரசேகர் மதுரை மைந்தன்,வேல் பாண்டியன் ஆகியோர் கவிதை பாடினார்கள் சிறப்பாக கவிதை வாசித்த கவிதாயினி காயத்ரி அவர்களுக்கு கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் விருது வழங்கினார்கள்.
"தமிழ் எங்கள் உயிருக்கு மேல் " என்ற தலைப்பில் நடந்த கவிதை போட்டிக்கு நூறு கவிதைகள் வந்தன .ஐவருக்கு பரிசும், பத்துப் பேருக்கு ஊக்கப்பரிசும்,பத்துப் பேருக்கு ஆறுதல் பரிசும் ,எழுபத்திஐந்து பேருக்கு பதக்கமும் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களையும் தமிழன்னை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கருங்கல் கி .கண்ணன் அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றினார் .துணைச் செயலர் கு .கி ..கங்காதரன் நன்றி கூறினார் .மதுரை உலா ரெ.கார்த்திகேயன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.மாதாமாதம் கவியரங்கம் நடத்திட மணியம்மை பள்ளியைத் தந்து உதவும் பி.வரதராசன் அவர்களுக்கு அனைவரும் நன்றி கூறினார்கள்.
படங்கள் புகைப்படக் கலைஞர்கள் இரமேஷ், ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.
.
நன்றி தினமலர் 27.9.2026
ஏடா தமிழா! உனக்கு இன்னும் உறக்கமோ?
- கவிஞர் இரா. இரவி
*****
அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி
அடுக்குமோ இது தமிழுக்குத் துரோகமே!
ஆங்கிலவழிக் கல்வியில் படித்தே
ஐயோ பட்டம் வரை படித்துச் செல்கின்றனர்!
தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி தமிழே
தமிழ்நாட்டில் சட்டம் இயற்றிட வேண்டும்!
நீதிமன்றம் தீர்ப்பு தந்தபோதும் குடமுழுக்கு
நம் தமிழில் நடைபெறாதது வேதனையே!
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில்
சங்கத்தமிழ் ஒலிக்க வேண்டும் நீதிமன்றத்தில்!
கடவுளின் கருவறையில் சமஸ்கிருதம் எதற்கு
கடவுளுக்கு சங்கத்தமிழ் நன்றாகவே புரியும்
தேவாரம் திருவாசகம் திருப்பாவை திருவெம்பாவை
தித்திக்கும் தமிழில் கருவறையில் ஒலிக்கட்டும்!
தமிழ்நாட்டில் தமிழுக்கு தடைவிதிக்க யார் நீ!
தமிழனின் கோயிலில் தமிழே முழங்க வேண்டும்!
தமிங்கில உரைக்கு முடிவு கட்டுவோம்
தனித்தமிழில் உரையாற்றிட முடிவு எடுப்போம்!
அங்காடி பெயர்ப்பலகைகளில் அழகுத்தமிழ்
இடம்பெற வேண்டும்! நடைமுறைப்படுத்துவோம்
தமிழ்மொழிக்கு அதிக நிதிஒதுக்கீடு வேண்டும்!
தமிழ்மொழியே உலகின் முதல்மொழி அறிந்திடுக
ஏடா தமிழா உனக்கு இன்னும் உறக்கமோ
எழுந்திரு தமிழா உறங்கியது போதுமடா!
••••••.......
*ஏடா தமிழா! உனக்கு இன்னும் உறக்கமா?*
* ஏடா தமிழா! இன்னும் உறக்கமா?
* எரியும் மொழித்துயர் உனக்குத் தெரியுமா?
* இளைஞனே! எழுவாய்! இனமொழி காப்பாய்!
* இழந்த உரிமை மீட்டிடு இன்றே!
* தமிழனே தமிழனுடன் தமிழிலே பேசு!
* தாய்மொழிப் பேச்சில் தன்மானம் காட்டு!
* பிறமொழி ஆதிக்கம் பொசுங்கட்டும் இன்றே!
* பிறமொழி மோகத்தைப் புறந்தள்ளு தமிழா!
* கலைச்சொல் அனைத்தும் தமிழிலே வேண்டும்!
* அறிவியல் தமிழில் ஆழமாய் வளரட்டும்!
* தொழில்நுட்பச் சொற்கள் தமிழிலே மலரட்டும்!
* தமிழ்ச்சொல் படைக்கத் தயங்காதே இளைஞா!
* தமிழ்வழிக் கல்வி எங்கும் வேண்டும்!
* நீதிமன்றம் தமிழில் இயங்க வேண்டும்!
* அரசுப்பணியில் தமிழர்க்கு முன்னுரிமை வேண்டும்!
* தமிழில் பயின்றோர் உரிமை பெறட்டும்!
* பெயர்ப்பலகை அனைத்தும் தமிழிலே மிளிரட்டும்!
* குழந்தைப் பெயர்கள் தமிழிலேயே அமையட்டும்!
* ஒன்றியத்தின் மொழித்திணிப்பு ஒழிய வேண்டும்!
* ஒருமொழி ஆதிக்கம் ஓய்ந்திட வேண்டும்!
* இளைஞர் படையே! எழுச்சி கொண்டெழு!
* தமிழைக் காக்கத் துணிந்து முழங்கு!
* உறங்கும் தமிழர் உணர்வைத் தூண்டுவோம்!
* தமிழ் வாழ்க! தன்மானம் வெல்க!
*
ந சுந்தரம் பாண்டி மதுரை
************
*தமிழ் எங்கள் உயிருக்கு மேல்*
தமிழெங்கள் உயிர்காக்கும் தெய்வம் என்போம்
அமிழ்தென்றும் அகிலத்திலே அனைத்திற்கும் மேலே
தமிழ்தாங்கும் நல்லுலகில் தமிழே உணர்வே
தமிழர்தொழும் தனித்தெய்வம் தமிழே தானே
தானாகப் பிறந்தமொழி தமிழ்தான் புவியிலே
வானாளும் புகழொன்றி வளர்ந்த தமிழே
தமைமறந்தே தமிழ்காக்க தாமாய் வந்தே
இமைகாக்கும கண்களென்றே இன்தமிழ் காத்தே
தலைமுறைகள் தாண்டியின்றும் தழைப்பது தமிழே
வலைப்பின்னல் மொழிகளிலும் வாழும் தமிழே
தொல்காப்பியம் தோன்றிட்ட தொட்டில் மொழியே
தொல்லிலக்கு தெரியாத தொகுப்பு சங்கமே
திருக்குறள் தந்திட்ட தேனமுது மொழியே
திருவாசகத் தெள்ளமுதம் தெளிந்திட்ட சிறப்பே
தமிழுக்கே ஐந்நிலம் தரணியில் வாழ்முறை
தமிழ்ச்சுவையே தனிச்சுவை தன்னிக ரில்லாத் தமிழன்
தமிழன்றி உயிர்க்குமேல்
தமிழனுக் கேது
தமிழேதான் தாய்ப்பாலாம் தளிர்த்திடும் உயிரே
வானியலும் அறிவியலும் வாழ்வியல் ஞானம்
மானிடரின் உளவியலும் மண்வளக் கலையும்
நிலமாளும் அரசியலும் நேயமும் மனிதமும்
உலகிற்கே கற்பித்த உன்னதம் தமிழே
தமிழ்தாழ்ந்தால் தமிழினமே தாழ்ந்திடும் உணர்வீர்
தமிழ்தழைக்க உயிர்கூடத் தருவோம் நாமே!
********************
ந.சுந்தரம் பாண்டி
மதுரை
**********
ஏடா தமிழா -உனக்கு
இன்னும் உறக்கமோ?
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்
தமிழா! இதுவரையில் சாதித்தது போதுமா?
தமிழின் வளர்ச்சிக்கு உழைத்ததின் களைப்பா?
மூன்று தமிழ்ச் சங்கங்களை நினைத்துப் பார்
நான்காம் தமிழ்ச் சங்கத்தை திரும்பிப் பார்!
தமிழ்ச் சங்கங்களின் முகவரியை மறந்தாயா?
தமிழன்னை தாலாட்டில் உறங்கி விட்டாயா?
காலத்தின் வேகத்தை கணிக்கத் தவறாதே?
காவலனாய் தமிழை காக்கத் தவறாதே!
கொத்தாக மொழிகள் அழிவது அறிவாயா?
கணினி கடலில் தமிழ்மொழியை தள்ளிவிடாதே!
கைப்பேசியில் தமிழை அழித்திடத் துணியாதே!
செயற்கை நுண்ணறிவில் தமிழை இழந்துவிடாதே!
ஐந்தாம் தமிழ்ச் சங்கத்தை உடனே தொடங்கு!
ஆறாம் தமிழ்ச் சங்கத்திற்கும் திட்டமிடு !
உறக்கத்திற்கு விடை கொடுத்துவிடு தமிழா!
உடைமைத் தமிழை விட்டுவிடாதே தமிழா!
*********








































































































































































































































































































































































No comments:
Post a Comment