Monday, July 30, 2018

29.7.18 தமிழ்மொழியின் நிறைகாக்கும் காப்பே காப்பு


                கவிதை எண் : 1
தமிழ்மொழியின் நிறைகாக்கும் காப்பே காப்பு

தமிழ்மொழியென் உயிரென்றே தாவுகின்ற தமிழா
   தனித்தமிழில் பேசிடவும் தயங்குவது சரியா?
உமியென்று கருதுகின்ற ஒதுக்கிவைத்த மொழியே
   ஊடுகளை யாகிடவே உதவுவதும் இழிவே
உமிழ்கின்ற எச்சிலென ஊரான்சொல் உனக்கே
   உதவாது என்நாளும் உனைவருத்தும் பிணக்கே     
தமிழால்நீ வாழ்ந்தாலும் தனித்தமிழில் ஈர்ப்பே
   தமிழ்த்தாயின் நிறைகாக்கும் தளராத காப்பே!

உலகமொழி அத்தனைக்கும் உயர்வாகும் தமிழே
    உருக்குலைக்க முயல்கின்றார் ஓயாது சிலரே
கலகமதை உருவாக்கும் கயவர்களின் செயலால்
    கன்னித்தமிழ் இந்நாளில் கலங்குதடா புயலாய்
நிலவொன்று முழுதானால் நீள்வானைப் புகழ்வோம்
    நித்தம்நாம் தனித்தமிழின் நிறைகாத்து மகிழ்வோம்
தலப்பெருமை காப்பதுநம் தனித்தமிழே என்றே
    தளர்வின்றி அதைக்காக்க தாள்பணிதல் நன்றே!

சந்தனத்தை அரைத்தாங்கு சரியளவில் அங்கும்
   சங்களவு நறுமணமும் சேரமணம் பொங்கும்
தந்திரமாய் நம்தமிழின் தனித்தன்மை கூட்டு
   தப்பாது அதன்மகிமை தரணிக்கு காட்டு
மந்திரத்தால் தமிழ்காக்கும் மாயவித்தை வேண்டாம்
   மதிநுட்பத் தமிழொன்றே மணம்கூட்டும் சான்றாம்
இந்திரனே வந்தாலும் இனிநாமும் ஒன்றே
   இங்குதமிழ் நிறைகாத்து இன்புறலாம் நன்றே!  
                     முனைவர் இரா. வரதராசன்,
                 கை.பே:98421 64978 / 7010717550 (வா.ஆ.)
                     *****************
                         கவிதை எண் : 2
         தமிழ்மொழியின் நிறைகாக்கும் காப்பே காப்பு

கண்ணகித்தாய் அந்நாளில் கைம்பெண்ணாய் ஆனதினால்
கன்றிழந்த தாய்ப்பசுவாய் கைலாய உணர்வோடு
காற்சிலம்பு தனதெனவே கனல்பறக்க அரசவையில்
கண்ணீரால் பாண்டியனை கலங்கத்தான் செய்தாளே!

இதையின்று சொல்லவந்த எனைமறித்து கேட்போர்க்கு
பதமாகக் கோலோச்சும் பைந்தமிழின் பெருமையினை
இதமாகக் காத்திடவே எடுத்துரைக்கும் சொல்கேட்டு
நிதமும்நம் கடமையென நிறைகாக்க வரலாமே!

தமிழென்றும் தனியாகத் தள்ளாடும் மொழியல்ல
அமிழாத கப்பலென அரியதொரு மொழியன்றோ!
திமிழுயர்ந்த காளையென தின்னமுடன் வாழ்கின்ற
குமிழுக்குள் ஒளிர்கின்ற குறைவில்லா நம்தமிழே!

போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூற்றட்டும்
ஏற்றமிகு நம்செயலால் எடுத்துரைப்போம் தனித்தமிழை!
நாற்றங்கால் நடுவினிலே நயமான நெற்பயிர்போல்
சேற்றினில் மணக்கின்ற செந்தாமரை நம்தமிழே!

பலகலை கற்றாலும் பைந்தமிழைக் காக்காமல்
சிலகாலம் சென்றாலும் செந்தமிழின் சிறப்பொன்றை
உலகறியச் செய்திட்டால் உனைநீயே புகழ்ந்திடுவாய்
குலம்வாழ நிறைகாத்த குறைவில்லா தமிழ்மொழியே!

மதம்பிடித்த யானையென மணித்தமிழின் தனித்துவத்தை
இதமுடனே துணிந்தெங்கும் எல்லோர்க்கும் எடுத்துரைப்போம்
விதவிதமாய் நமைவதைக்கும் வீணான வடசொல்லைப்
பதமாகத் தள்ளிவைத்தல் பைந்தமிழின் நிறைகாப்பே!
                     கவிக்குயில் நெல்லை பி. மஞ்சுளா
                             கை.பே: 89035 92497
              &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
                  கவிதை எண் : 3 
    தமிழ்மொழியின் நிறைகாக்கும் காப்பே காப்பு

மகிழ்வுபொங்க மாநிலத்தே முதலாய்
என்றும் திகழும் 
தமிழ் மொழியின் நிறைகாக்கும்
காப்பே காப்பு!
அதைத்தான் அதன்சிறப்பைக் குலைக்க
நினைப்பவர் நினைப்பு
கவிழ்ந்தே போய்விடும் எத்தகைய
கயவரின் காழ்ப்பு!

மங்கலத் தமிழில் மற்றஎழுத்தினை
முறைகெட சேர்த்தே
சிங்கநிகர் தமிழர்தம் மொழிதனை
சீர்குலைத்தல் சரியோ!
சங்கம்தந்த எழுத்தில் சண்டாளர்
சதியினை முறித்து
தங்கமென செந்தமிழ் செழிக்கட்டும்
தரணியில் சிறந்து!

அன்னிய மொழியாம் வடமொழி
ஆட்சிக் கட்டிலில்
இன்றே அமர்ந்திட துடிப்பதற்கு
இடமதும் தரலாமோ!
மண்ணில் மாதமிழுக்கு அல்லல்வரின்
சின்னா பின்னமாக்கு!
கண்ணான தமிழரின் பெருமையை
காலத்தே உணர்த்து!
                  - மதுரை . பாண்டியன்
                    .பே: 92455 71522
          %%%%%%%%%%%%%%%%%%
                   கவிதை எண் : 4 
தமிழ்மொழியின் நிறைகாக்கும் காப்பே காப்பு

அருந்தமிழை அமுதென்றும் ஆருயிரென்றும்
   பாடிப் பரவினார் பாவேந்தர் பாரதிதாசன்
ஆளுமைத்திறன் போற்றப்பாடிய பாரதிப்புலவனும்
     தமிழ்மொழிபோல இனிதாவதெங்கும் காணோமென்றார்
    
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்று
     சுடரொளிக்கும் தமிழ்ச்சொல்லே உயர்வானதென்றார்
சொல்புதிது பொருள்புதிது சுடர்மிக்ககத் தமிழ்க் கவிதையென்றார்
     சுடரொளிக்கும் செங்கதிரின் ஒளிவீச்சிலேயே தமிழ்கண்டார்

தமிழ்தோன்றிய காலத்தில் கல்லும் மண்ணும்கூட இல்லை
     தமிழ்மொழியின் தொன்மை பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
அகத்திய இலக்கணத்தின் ஆழம் அகலமறிந்து
     அதன்வழி நூலாய்க் காப்பியம் தொல்காப்பியர் படைத்தார்.

இலக்கணம் செம்மைச் செறிவோடு படைக்கப்பட்ட
      இலக்கியங்கள் இலக்கியப் பனுவல்கள் ஏராளம் ஏராளம்
இலக்கணம் ஐந்தினோடும் இலக்கியச் செறிவினோடும்
      இலக்கியங்கள் ஐம்பெருங் காப்பியங்கள் சிறுகாப்பியங்கள்

இனிமைப் பெருங்கதை பேசும் இராமாயணம் பாரதம்
     இனிமைக்கு இனிமை சேர்க்கும் இயல்புடைய அன்னைத்தமிழ்
இளமையாய் என்றும் விளங்கும் அன்னைத்தமிழ் உயர்வு
     ஏற்றமிகுத் தமிழின் நிறைகாக்கும் காப்பே தலையென்போம்

உலகத் தமிழரெல்லாம் ஒருங்கிணைவோம்
    உன்னதத் தமிழ்த்தாயின் உயர்வினைக் காப்போம்
ஞாணியாய்த் திரண்டிருந்து நம்தாய் தமிழ்மொழியின்  
    நிறைகாக்கும் காப்பே தலையென முரசறைவோம்
                   கவிமாமணி யா. செயரத்னம்
                .பே: 89030 42564

                           $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
                 கவிதை எண் : 5 
தமிழ்மொழியின் நிறைகாக்கும் காப்பே காப்பு

எம்மொழி மூப்புமாய் நின்றதமிழ்இங்கு
எட்டுத்திக்கும் புகழ் கண்டதமிழ்
மூவேந்தர் போற்றிய முத்துத்தமிழ்தொடர்
மூவுலகும் ஆளும் கன்னித்தமிழ்.

சற்றும் இளமை குறையாதமிழ்பெரு
சந்த ஓசையிங்கு கொண்டதமிழ்
சாகா வரம்பெற்ற எந்தன்தமிழ்இன்று
சத்திய சோதனைக்கான தமிழ்.

வடமொழி எழுத்துக்கள் கலப்பாலேநம்
வளர்மொழி மங்குது தன்னாலே
இனிவரும் சந்ததி இயல்பாகதமிழ்
இயம்பிடக் கேட்டல் எந்நாளோ.

கணினியில் கலப்படம் ஆகுதுங்கமொழி
காட்சிப் பொருளாய் மாறுதுங்க
இலக்கணம் இலக்கியம் என்னவென்று - தமிழ்
இளைய தலைமுறை கேக்குதுங்க.

இப்படி நிலையும் ஏற்பாட்டால் - தமிழ்
எப்படி காப்பது எவ்வாறு?
பிறமொழி மோகத்தை விட்டுவிட்டுதமிழ்
அறமொழி வழிதனில் உரையாடு.

பயிர்தனை அழித்திடும் களைச்செடிபோல்இங்கு
பாழ்செய்யும் பிறமொழி உனக்கெதற்கு?
தமிழ்மொழி நிறைகாக்கும் முழுப்பொறுப்பு
தரணியில் நீகாக்கும் பெருங்காப்பு
                            பசுமலை . சசிக்குமார் 
                            .பே: 95971 84101 
              %%%%%%%%%%%%%%%%%%%% 
        கவிதை எண் : 6
தமிழ்மொழியின் நிறைகாக்கும் காப்பே காப்பு
தமிழ்மொழி என்றும் நிறைவானது அது
தமிழரின் மனங்களில் நிலையானது
ஆதிகாலத்தில் உருவானதுதமிழ்
அழியாத வரம் பெற்றது.

தமிழைக் காக்க திரளுவோம்
தமிழைக் கற்று வளர்வோம்
தமிழைக் காக்க வாதாடுவோம்
தமிழுக்காக எந்நாளும் போராடுவோம்.

தேய்வதற்கு தமிழென்ன நிலவாஅதை
தேய விடுவது தமிழரின் அறிவா?
சிந்தித்துப்பார் தமிழனே விரிவாய் உன்
சிந்தனைக்குப் புரியும் தெளிவாய்.

நிறைவாய்ச் சொல்கிறேன் தெளிவாய்உன்
நினைவில் இருக்கட்டும் தமிழ் வலுவாய்
தமிழன் காக்கும் காப்பாய்இனி
தமிழ் இருக்கட்டும் பாதுகாப்பாய்.

தமிழ் மொழியின் நிறையைக் காப்போம்
தமிழுக்கு இன்னும் புகழைச் சேர்ப்போம்
தமிழுக்கு நாம் கொடுக்கும் மதிப்புஅதுவே
தமிழைக் காக்கும் நிறைகாப்பு.
                      - மதுரை சு. வைரன்
                       .பே: 96264 12729 
          ###############################  
                     கவிதை எண் : 7
தமிழ்மொழியின் நிறைகாக்கும் காப்பே காப்பு

ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கலை
அன்னைத் தமிழை வளர்க்கும் நிலை
இல்லாத ஊரில் அழகான சூழல்
ஆங்கிலக் கலப்பில் அழுக்கானத் தமிழ்.

உறைந்து போயின இனிய இலக்கியங்கள்
கரைந்து போகும் கனிந்த கலைகள்
மறைந்து போகும் மானமுள்ளத் தனித்தமிழ்
சிதைந்து போயின சிங்காரத் தமிழ்.

உறுப்பு இழந்தால் மாற்றுப்பு உதவும்
உயிர் இழந்தால் மாற்றுயிர் உதவுமா?
பூக்கள் உதிர்ந்தால் மீண்டும் பூக்கலாம்
பூந்தமிழ் மறைந்தால் மீண்டும் மலருமா?

தமிழர்களின் தாயான செந்தமிழை மறவோம்
தாலாட்டிச் சீராட்டும் கன்னித்தமிழை மறவோம்
உடலோடு ஒட்டிய உரிமைத்தமிழை மறவோம்.
உயிரோடு கலந்த உன்னதத்தமிழை மறவோம்.

அனையாவிளக்காய் ஒளிரும் தமிழைக் காப்போம்
அமுதமழையாய் பெய்யும் தமிழைக் காப்போம்
குறையில்லாத் திவ்வியத் தமிழைக் காப்போம்
நிறைக்காத்துச் செம்மொழித் தமிழைக் காப்போம்

                 ----- கு.கி.கங்காதரன் ... மதுரை 

                        கவிதை எண் : 8


                           
                          கவிதை எண் : 9



              கவிதை எண் : 10


தமிழ்மொழியின் நிறைகாக்கும் காப்பே காப்பு
                 *******************************************
                           (எண்சீர் விருத்தம்)

அலையலையாய் எழுகின்ற அச்சின் புள்ளி
   ஆண்டுவிட நீள்கிறதே தமிழின் எல்லை !
மலையெனவே குவிந்திருக்கும் மரபும் அங்கே
   மனம்நிறைந்த வாழ்வளிக்கும் மாண்பும் இங்கே !
கலைமகளே கைத்தட்டி களித்தாள் அங்கே
  கருணைமழை கதிர்வீச்சாய் நீளும் இங்கே !
சிலையொன்று வடித்தேனே சிந்தை வார்ப்பு
  சீர்தளைகள் செதுக்கிவிட சேர்ப்பேன் காப்பு !  (1)

மாறாத தமிழ்ச்சுவையோ மதுரை மண்ணில்
  மணக்கின்ற வாசம்தான் ஈர்க்கும் என்னை !
கூறாத சொற்கொண்டு கூறும் பாக்கள்
   குமரிமுனை கடற்கோளால் நீண்டு போகும் !
தீராத தமிழ்ப்பணிக்கு தீயை மூட்ட
  தென்னவர்தான் மாமதுரை மன்றம் கண்டார் !
ஆறாகப் பாய்கின்ற கவியின் ஊற்று 
   அணைபோட்டு ஆள்வோரும் பாரில் உண்டோ (2)


தாயாக நீயிருப்பாய் தயவாய் என்றும்
   தனித்தமிழில் பாவியற்றத் தமிழால் நின்றோம் !
 சேயாக வருகின்றச் செல்லப் பிள்ளை
   செய்பிழையைப் பொறுப்பாய்நீ செங்கோல் நீட்டி !
காயாக சிலநேரம் பாக்கள் உண்டு
   கனிச்சுவைக்கு ஈடான கருத்தும் கொண்டு
ஓயாது தமிழ்ப்பாக்கள் உள்ளம் ஊறும்
    உலகத்தை நீயாள தூர மில்லை ! (3)

காப்பிட்ட கவியனைத்தும் காலம் வெல்லும்
   கன்னிதமிழ் பாவியற்ற காலன் ஓடும் !
மூப்பில்லா மூத்தவளே முன்பாய் வாராய்
    மூச்சிரைப்பு கொள்ளாது பாக்கள் கேட்பாய் !
நாப்பண்ணால் நற்றமிழை நல்கும் நன்றி
    நலிவில்லா நணிவாழ்வு நாளும் கிட்டும் !
யாப்பென்றால் மருந்தாக யாரும் கொள்ள
   யாத்திட்ட பைந்தமிழே என்றும் காப்பு ! (4)

கற்கண்டும் கற்கண்டும் மோதி மோதி
  கரும்பாக இனிக்கிறதே தமிழின் சாறு
சொற்கொண்டு பாமாலை தொடுக்கும் வேளை
   சுந்தரரும் வந்தருள்வார் சுவைத்துப் பார்க்க
விற்கொண்டு எய்திட்ட அம்பாய் நானும்
   வீரியச்சொல் வித்தகரே வேண்டும் மீண்டும்
பொற்கொண்டு பொரித்திட்ட பாக்கள் யாவும்
   புதுமையிலும் பாயிரமாய் வார்ப்பேன் காப்பு ! (5)

மொத்தத்தில் பாப்பத்து காப்பில் இட்டு 
   முன்னோரை மனதிலெண்ணித் தொட்டு விட்டால் !
எத்திக்குச் சென்றாலும் எதிர்ப்பு இல்லை
   எம்மொழியாம் தமிழுக்கு விரியும் எல்லை !
சொத்தாக்கிக் கொண்டாரே கலைகள் நூறு
    சுவையூறும் நறுந்தமிழை நாளும் வார்க்க
வித்தகரின் மாமன்ற கூட்டம் இன்று
   வித்தாக்கும் சிந்தைக்கு விடியல் தேடும் ! (6)

                    பாவாக்கம்
                    பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி                                                               தலைவர்,                                                                                                          வாழ்வியல் இலக்கியப் பொழில்                                                                சிங்கப்பூர். 
                                    0065-92288544

                                     கவிதை எண்  : 11


















































































&&&&&&&&&&&&&&&&&&&&