Sunday, January 5, 2025

29.12.2024 கவியரங்கம் - 29 -பாரதியின் ஆத்திசூடி -முனைவர் இரா .வரதராசன்- தமிழ் மண்ணில் தவயோகிகள்- கவிதை நூல் வெளியீடு .

 

 

கவியரங்கம் - 29  -முனைவர்  இரா .வரதராசன்- 

தமிழ் மண்ணில் தவ யோகிகள் -  கவிதை நூல் வெளியீடு .

29.12.2024 கவியரங்கம்

மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது.

"பாரதியின் ஆத்திசூடி " என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.

மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம், மதுரை, வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.தலைவர் பேராசிரியர் சி .சக்திவேல் தலைமையில் கவியரங்கம்   நடந்தது தமிழ்ச்செம்மல் செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார் .பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் முனைவர் இரா .வரதராஜன் முன்னிலை வகித்தனர் .

முனைவர் இரா .வரதராசன்  எழுதிய  "தமிழ் மண்ணில் தவயோகிகள்"  எனும் கவிதை நூல் வெளியிட்டனர் .

கவிஞர்கள் இரா.இரவி முனைவர் இரா.வரதராசன், இரா.கல்யாணசுந்தரம், கு .கி  கங்காதரன்,  புலவர் மகா . முருகு பாரதி,குறளடியான் , அழகையா ,  புலவர் ஆறுமுகம்  லிங்கம்மாள், முனியாண்டி,அழகையா,  அஞ்சூரியா க . செயராமன் , பா.பழனி,   கு .பால் பேரின்பநாதன் , முனைவர் ஸ்ரீ வித்யா , சு.பாலகிருட்டிணன்    ஆகியோர் கவிதை பாடினார்கள்.

சிறப்பாக கவிதை பாடிய கு .பால் பேரின்பநாதன் , முனைவர் ஸ்ரீ வித்யா இருவரும் , தமிழறிஞர் அழகுராஜன் வழங்கிய திருக்குறள் நூல் பரிசாகப் பெற்றனர் .

துணைச்செயலர் கு .கி  கங்காதரன் முன்னிலை உரையாற்றினார். நன்றி கூறினார்

பார்வையாளர்களாக செந்தமிழ்க் கல்லூரி விரிவுரையாளர் அதி வீர பாண்டியன், உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கவியரங்கம் நடத்த மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் இப்பள்ளியின் தாளாளர்,  மன்றத்தின் தலைவர்   பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள்.

படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.









பாரதியின் ஆத்திசூடி

கொடுமையை எதிர்த்து நில்

-    கவிஞர் இரா. இரவி

**

கொடுமையை எதிர்த்து நில் என்றார் பாரதியார்

கொடுமை கண்டால் ஒதுங்கி விடுகிறோம்

தமிழ்க்கொலை நாளும் நடந்து வருகிறது

தமிங்கிலத்தை எதிர்த்து நிற்க வாருங்கள்


ஊடகத்தில் தமிங்கிலமே பேசி வருகின்றனர்

ஊடகத்திற்கு கண்டனத்தை பதிவு செய்வோம்

விளம்பரங்களில் தமிழ் இல்லவே இல்லை

விளம்பரங்களை தட்டிக் கேட்போம் வாருங்கள்


திரைஇசைப்பாடல்களில் தமிங்கிலம் நாளும்

திரைத்துறைக்கு எதிர்ப்பைத் தெரிவிப்போம் வாருங்கள்

விளம்பரப் பலகைளில் தமிழ் இல்லை

வீதியில் இறங்கி கண்டிப்போம் வாருங்கள்


தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடக்கிறது

தமிழர்கள் ஒன்றுதிரண்டு குரல் தருவோம்

மும்மொழியை திணிக்கப் பார்க்கிறார்கள்

முக்காலமும் எதிர்ப்போம் என்று காட்டுவோம்


திருக்குறளை தேசிய நூலாக்க மறுக்கிறார்கள்

திருக்குறளை தேசிய நூலாக்கியே தீருவோம்

தீண்டாமை பெருங்குற்றம் என உணர்த்துவோம்

தீண்டாமை எங்கு நடந்தாலும் எதிர்ப்போம்


மதத்தின் பெயரால் பிரிப்போரை உணர்ந்து

மதம் மறந்து அனைவரும் சங்கமிப்போம்

கொடுமை எந்த வடிவில் வந்தாலும் எதிர்ப்போம்

கொடுமை கண்டு பொங்குவோம் வாருங்கள்

•••••









                                                                          
                     

                                                                                                              






                                                      














பாரதியின் ஆத்திசூடி  
புதுக்கவிதை 
கு.கி. கங்காதரன் 
ஐம்பொறி ஆட்சி கொள் 

வீரக்கவி பாரதியின் படைப்பில் ஆத்திசூடி 
வற்றாமல்  சுரக்கும் புதுக்கவிதை மடி 
எவரையும் உசுப்பும் சிந்தனை ஊற்று 
ஐம்பொறி ஆட்சி கொள் தலைப்பும்  ஒன்று 

ஐம்பொறிகள் நம்மை அடிமை ஆக்கும்
அன்பையும் அறிவையும் மழுங்க வைக்கும்  
எல்லா காலத்திலும் அவதி கொடுக்கும் 
ஆனந்தம் அமைதியை குலைக்கச் செய்யும்  

உலகமே மாயையின் விளையாட்டுத் திடல்
ஆளை மூழ்கடிக்கும் ஆழமானக் கடல் 
சொக்க வைக்கும் கண்கவர் காட்சிகள் 
சுண்டி இழுக்கும் காதுக்கினியப் பேச்சு 

மயக்கத்தை உண்டாக்கும் சுகமான உணர்வுகள் 
மதுரமான நறுமணத்தை நுகரும் நாசி 
வாய்மை தவறும் பொய் வாக்குறிதிகள் 
வளமான வாழ்க்கையை கலைக்கும் 
ஐம்பொறிகள் இவை..

ஆக்கத்திற்கு ஐம்பொறிகள் அவசியம் நமக்கு 
அளவாகப் பயன்படுத்தினால் நன்மை இருக்கு 
ஐம்பொறிகளை அடக்க ஆசையை அடக்கனும் 
ஆசையை அடக்கினால் அகிலமும் 
கட்டுப்படும்

***********





































**********