25.12.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்
மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்.
பைந்தமிழ் பாவலர் பாரதி
இடம்: மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளி
தலைமை : பேராசிரியர் சக்திவேல் தலைவர்,
முன்னிலை கவிஞர் இரா.இரவி செயலர்,
சிறப்புரை பி.வரதராசன் தலைவர் புரட்சிக் கவிஞர் மன்றம்.
கவிதாயினி சாந்தி திருநாவுக்கரசு அவர்களின் "யாக்கைச் சுடர் "கவிதை நூல் வெளியிடப்பட்டது. வருகை தந்த அனைவருக்கும் இந்நூலை நன்கொடையாக வழங்கினார் நூல் ஆசிரியர்.
மேலும், கவிஞர்கள் இரா.கல்யாணசுந்தரம், கு.கி.கங்காதரன், குறளடியான் மற்றும் பலர் 'பைந்தமிழ் பாவலர் பாரதி' என்ற தலைப்பில் பேராசிரியர் சி.சக்திவேல் தலைமையில், கவிஞர்கள் இரா.இரவி, இரா.கல்யாணசுந்தரம், கு.கி.கங்காதரன், குறளடியான், இராமபாண்டியன், அஞ்சூரியா செயராமன், ஜெ.அனுராதா, பா.பொன்பாண்டி புலவர் மகா .முருகபாரதி, ,சாந்தி திருநாவுக்கரசு, லிங்கம்மாள், மு.ரித்திகா ஸ்ரீ, சு.பால கிருட்டிணன் ஆகியோர் கவிதை படித்தனர் .கந்தசாமி, நா.குருசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர் .
படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.25.12.2022
பைந்தமிழ் பாவலர் பாரதி
முனைவர் இரா. வரதராசன்
பைந்தமிழ் காத்திடப் பாடுபட்ட புலவர்களில்
-பகட்டேதும் இல்லாத பாரதியார் அந்நாளில்
கைமேல் பலன்கிட்ட பட்டிதொட்டி மக்களிடைப்
-பக்குவமாய் எடுத்துரைத்தார் பாட்டுக்கோர் புலவனாய்
மெய்வருத்தம் பாராது மீட்டெடுத்தார் தமிழுணர்வை
-மேல்நாட்டுப் பாவலரும் மிகையின்றி போற்றினரே
வெய்யில்மழை பாராது வீதியெல்லாம் தன்பாட்டை
-வேண்டியே கேட்டுமாந்தர் வியந்தனர் அவர்புலமை.
வைகறைப் பொழுதினில் வாசலைப் பெருக்கி
-வண்ணவண்ணக் கோலமிட்டு வாடாத மலர்தூவி
தொய்வின்றி தெய்வங்களைத் தொழுகின்ற நாட்டிலே
-தூயதமிழ் நடையிலே துணிவாகப் பரங்கியனை
நையவே புடைத்தன்று நாட்டைவிட் டேவிரட்ட
-நம்நாட்டு மக்களிடை நாட்டுப்பற் றைவளர்த்து
மெய்யுணர்வைத் தூண்டுகிற மின்னலெனக் கவிபாடி
-மெட்டுகள் அதிலேற்ற மிளிர்ந்தது தமிழுணர்வு.
பாரதியார் பாட்டினிலே பைந்தமிழ் நடனமாடும்
-பாரதத்தின் விடுதலைக்கு பக்கபலம் தமிழ்வாசம்
சாரதியாய் தமிழ்த்தேரை சாதித்தே ஓட்டியவர்
-சக்தியைப் பாடியவர் சாதிகளைச் சாடியவர்
ஊரறிய உலகறிய உண்மையினை எடுத்துரைக்க
-ஒருநாளும் தயங்காத உரம்கொண்ட நெஞ்சினான்
பாருக்குள் ஓர்நாடு பாரதப் பொன்னாடென
-பாலகரை உணர்வோடு பாடவைத்த பைந்தமிழன்.
செந்தமிழ் நாடென்றே செம்மையாய்ப் பாடினார்
-செவிக்குள் இசைக்கின்ற சிந்துகவி பாடினார்
கந்தனைப் பாடினார் கண்ணனையும் பாடினார்
-கைலாய மலைசூழும் கார்முகிலைப் பாடினார்
சுந்தரத் தமிழ்காக்க சூளுரைத்துப் பாடினார்
-சுற்றிவரும் பகையினை சொல்லியே சாடினார்
வந்தவரை வாழவைக்கும் வண்டமிழைக் கண்டவரை
-வாழியவென் றேவாழ்த்தும் வையகம் உள்ளவரை.
##############
பைந்தமிழ் பாவலர் பாரதி
புதுக்கவிதை
################