Wednesday, January 23, 2019

13.1.19 தை மகளே தை மகளே வருக இங்கே தமிழர்க்கு தமிழ்ப்பற்றை தருக நன்றே!





மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 




அன்று பாடிய கவிஞர்களின் கவிகள் மற்றும் மின்படங்கள் 


தை மகளே தை மகளே வருக இங்கே
தமிழர்க்கு தமிழ்ப்பற்றை தருக நன்றே!

தைமகளே தமிழ்மகளே வருக இங்கே
தமிழமுத கவிதை மழை தருக நன்றே!
மெய்தவழும் தாயே உனைப்போற்றுகிறேன்
மின்னலென ஓர் கவியை ஏற்றுகிறேன்
ஐவரையும் அணைத்திங்கே தலைமை காணும்
அன்னவரை மன்னரென அழைத்தேன் நானும்
பைதனிலே பாக்களுடன் பண்பாய் முன்னால்
பாட்டிசைக்க வந்தோரே வணக்கம் இந்நாள்!

தைமகளே தைமகளே வருக இங்கே
தமிழருக்குத் தமிழ்ப்பற்றை தருக நன்றே
கைநிறைய கழனிநெல்லும் குவியும் இந்நாள்
காசுபணம் நமக்குவந்து தழுவும் நன்நாள்
பொய்யுரைக்கும் நோக்கமில்லை மெய்தான் என்சொல்
பொறுமையுடன் கேட்டால் நம்கைமேல் இன்சொல்
செய்வதெல்லாம் சிறக்கவேண்டும் சிவனேபோற்றி
சேர்த்ததெல்லாம் நிலைக்கவேண்டும் அவனேசாட்சி!

தைமகளே தைமகளே வருக இங்கே
தடையின்றி தமிழுணர்வை தருக நன்றே
வைகை நீரும் ஓடவேண்டும் ஆற்றினிலே
வண்டமிழும் வாழவேண்டும் போற்றுவமே
பெய்யெனவே பெய்யும்மழை மீண்டும் வேண்டும்
பெட்டகத்தில் நம்தமிழேயாண்டும் வேண்டும்
ஐயமின்றி அருந்தமிழைக் காக்கவேண்டும்
அன்னியனின் மொழிக்கலப்பை நீக்கவேண்டும்!

தைமகளே தைமகளே வருக இங்கே
தமிழ்மொழியைக் கலப்பின்றி தருக நன்றே
செய்வதொன்றை அறியாமல் பலரும் இங்கு
சேற்றையள்ளி வீசுவதே அவரின் பங்கு
சைகையிலே சொல்லுகின்ற செயலில்கூட
சாத்தான் சொல்கலக்கிறதே தமிழோடின்று
கையெடுத்து கும்பிடுவேன் கலப்பேவேண்டாம்
காலமெல்லாம் கண்ணியமாய் பிழைப்பே காண்போம்!

முனைவர்இரா.வரதராசன்,மதுரை
7010717550
*************************************************************

          தை மகளே தை மகளே வருக இங்கே
          தமிழர்க்கு தமிழ்ப்பற்றை தருக நன்றே!

*        தரணி போற்றும் தமிழ்த்தாயின் தலைமகளே!
*        விளைவிக்கும் விவசாய வர்க்கத்தின் குலமகளே!
*        கலையாத கல்விக்கு வித்திடும் கலைமகளே!
*        தடமாறும் தமிழர்களை திருத்திடவே தப்பாது

*        நீயும் வந்திடுவாய் தைமகளே!
*        விதைத்த வித்துக்கு நல்முத்தை தரும் தைமகளே!
*        தமிழில் தமிழெழுத்துகள் மட்டுமே விதைத்திடுவாய் தமிழ்மகளே!
*        ஊறும் உதிரத்திலே உரம் ஊற்றிய உயர்மகளே!

*        தமிழெழுத்துகள் மட்டுமே செழிக்கும் செல்வம் நல்குவாய் திருமகளே!
*        வயிற்றுப் பசி போக்க வலி செய்யும் தைமகளே!
*        தமிழ்வார்த்தைகளால் நிறைந்த வளமை விளைவிப்பாய் வளமகளே!
*        தீஞ்சுவை கரும்பாய் இனித்திடும் தைமகளே!

*        தித்திக்கும் நம்சொற்களையே திகட்டாது தந்திடுவாய் தமிழ்மகளே!
*        சேற்று நிலத்திலே சோற்றைத் தந்திடும் தைமகளே!
*        சேரக்கூடா எழுத்துகள் எடுத்தெறிந்து எழுவாய் எழில்மகளே!
*        இளங்கன்றுகள் இமைய எழுச்சி உலகறிய செய்த தைமகளே!

*        இது போலே தமிழ் பெறுமை பெறுகச் செய்வாய் தமிழ்மகளே!
*        வளமான பசுமைக் கம்பளம் விரித்திடும் தைமகளே!
*        வலைத்தளத்திலும் தமிழ் தமிழாய் தலைநிமிர தருவாய் தமிழ்மகளே!
*        உழவ நண்பனின் உயர்வை உயிரைக் காத்த தைமகளே!

*        உறுதுணையாய்  உயிர்மெய்யெழுத்துகள் உய்விப்பாய் உயர்மகளே!
*        ஆதவனுக்கு அறுவடையை படையலிடும் தைமகளே!
*        ஆதித்தமிழில் அயலெழுத்துகள் அகற்றிடுவாய் அழகுமகளே!
*        அமுதூறும் அத்தமிழ் அவதரிக்கச் செய்குவாய் தமிழ்மகளே!

. பிரியதர்சினி, மதுரை.
******************************************************** 

தைமகளே தைமகளே வருக இங்கே
தமிழர்களுக்குத் தமிழ்பற்று தருக நன்றே

தொன்று தொட்டுத் தொடரும் திருநாள்
தைப்பொங்கல் கொண்டாடும் தமிழர்களே
தொன்மையான மூத்தமொழித் 'தமிழே'
தமிழரின் அடையாளமென உணர்வீரோ.

அடங்க மறுத்துச் சீறிப்பாயும்  காளைகளை 
அடக்கும் சிங்கங்களைப் பெற்றத் தமிழ்த்தாயே 
தமிழில் கலந்துள்ள கிரந்த எழுத்துக்களைத்
தணிக்கை செய்யும் துணிவை தருவாயே.

முன்னிரு ஆண்டுகள் முடங்கிய சல்லிக்கட்டை
மெரினாவில் முடிவு கட்டியத் தமிழினமே
தமிழில் தழுவி நிற்கும் அந்நியச் சொற்களைத்
தூக்கி எறிந்து வலிமையை நிலைநாட்டுவாயே .

மஞ்சுவிரட்டு வாடிவாசலில் நுழைந்த காளைகளை
முட்டிமோதி விரட்டும் திறன்மிக்க தமிழர்களே
தமிழில் பின்வாசலில் நுழைந்த அயலெழுத்துகளைத்
தடுத்து விரட்டும் நெஞ்சுறுதியை காட்டுவாயே.

உலகத் தமிழர்களே ஒருகுடையில் கூடுங்கள் 
உறவுகளே நட்புகளே சபதம் எடுங்கள்
தைத்திருநாளில் பொங்கல் திருநாளை மறவோம்
தமிழ்பற்றைத் தலையாய்த் தவறாது கடைபிடிப்போம்.

கு.கி.கங்காதரன், மதுரை











 


 **********************************



 *********************************



 *****************************

 
தைமகளே தைமகளே வருக இங்கே
தமிழருக்குத் தமிழ்ப்பற்றை தருகநன்றே
                           
தைமகளே தைமகளே வருக
தமிழனுக்கு தமிழ்ப்பற்று தருக
உள்ளத்தில் தமிழ்ப்பற்று இல்லை
இல்லத்தில் மொழிப்பற்று இல்லை
தமிழகத்தில் தமிழ்ப்பற்று இல்லை
தமிங்கிலம் பேசுவது தொல்லை
இதயத்தை திறந்துப்பார் இங்கே
இடிந்துப்போய் கிடக்கிறது அங்கே

பிறமொழி எழுத்தால் தமிழே
பேச்சிழந்து நிற்கிறதுபார் இங்கே
தடுமாறி நிற்பதுதான் ஏனோ
தடமாறி செல்வதுதான் வீனோ
அறுசுவையாய் ஆனாதுதான் தமிழமிழ்தம்
அதைமறந்து திரியலாம தமிழினமே
அரைகுறையாய் வாழ்ந்துவந்த அடுத்தமொழி
அடிவருடும் கூட்டமல்ல எங்கள் கூட்டம்

தங்குதடை இல்லாம் பேசிடுவோம்
தமிழ்பேசும் தமிழனாக மாறிடுவோம்
எங்களது தைமகளே ஏற்றிடுவாய்
மங்களாய் தமிழ்வளர போற்றிடுவாய்
புத்தாடை புனையவைத்த தமிழ்மகளே
பொங்கலினை பரிமாறும் தைமகளே
இத்தரையில் தமிழ்வாழ வழியைசொல்
இனியவழி எங ;களையும் அழைத்துசெல்

இரா. பாண்டியராஜன்
முழுநேர முனைவர்ப்பட்ட ஆய்வாளர்,
இக்கால இலக்கியத் துறை, தமிழியற்புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை – 21  அலைபேசி: 77088 16075.

மின்னஞ்சல்:  rpandiyarajan91@gmail.com




















































































 இந்த மின்படங்கள் அனுப்பிய அய்க்கூ திலகம் திரு இரா. இரவி மற்றும் திரு கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி ... 









































 நன்றி