.
விண்வெளித் தமிழர்களை வாழ்த்துவோம்!
கவிஞர் இரா. இரவி
அப்துல் கலாம் தொடங்கி வீர முத்துவேல் வரை
அனைவருமே தமிழர்கள் வானில் சாதித்தார்கள்
கோவை அருகே உள்ள கோதவாடி கிராமத்திற்கு
கீர்த்திகள் பெற்றுத்தந்தவர் மயில்சாமி அண்ணாத்துரை
சந்திரனுக்கு சந்திரயான் அனுப்பி ஆராய்ந்து
சந்திரனில் தண்ணீர் உண்டு என்று அறிவித்த தமிழர்
அப்பாவின் பெயரான அண்ணாத்துரையை
அன்றுமுதல் இன்றுவரை இணைத்துக் கொண்டவர்
அறிவியல் கட்டுரைகள் வடித்திட்ட பண்பாளர்
அறிவார்ந்த உரை நிகழ்த்திடும் பச்சைத்தமிழர்
விண்வெளி நடுவத்தின் இயக்குநராக இருந்தவர்
வியக்க வைத்த தமிழர் கைலாசவடிவு சிவன்
முப்பத்திமூன்று ஆண்டுகளாக செயற்கைக்கோள்களில்
முத்தாய்ப்பான பணிகளை ஆற்றியவர் சிவன்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு
முதலில் முடித்து பின்னர் சென்னையில் பயின்றவர்
நாகர்கோவில் அருகே உள்ள வல்லங்குமாரவிளை
நாயகனாக உதித்து வளர்த்தவர் தமிழர் சிவன்
சந்திரயான் மூன்று உலக சாதனையை தமிழர்
சத்தமில்லாமல் நிகழ்த்தியவர் வீர முத்துவேல்
விண்கலத்தின் மின்னணு அதிர்வுகள் பற்றிய
வியக்க வைக்கும் கட்டுரை வடித்து புகழ்பெற்றவர்
திட்டமிட்டு நேர்த்தியாக செயல்பட்டதால்
திட்டஇயக்குநராக பதவிக்கு உயர்த்தியது
தமிழ்வழியில் ஆரம்பக்கல்வி பயின்று வந்தால்
தரணியில் சாதிக்கலாம் மெய்ப்பித்த தமிழர்கள் வாழ்க!
************
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்
அணு தொடங்கி அண்டம் வரையில்
நிலம் தொடங்கி நிலவு வரையில்
அறிவியல் தொடங்கி ஆன்மிகம் வரையில்
அற்புதமான செயல்கள் எத்தனை எத்தனை!
எத்துறையிலும் காணலாம் தமிழர்களின் எழுச்சி
அத்துறைகளில் இருந்திடும் அசாத்திய வளர்ச்சி
விண்வெளித்துறையிலும் தமிழர்களின் புரட்சி
விண்ணளவுக்கு வெற்றிகளைக் குவித்ததே சாட்சி
இசுரோவின் சந்திராயன் மூன்று விண்ணில் பாய்ந்தது
உலகையே அண்ணாந்து பார்க்க வைத்தது
நிலவின் தென்துருவத்தில் ரோவர் இறங்கியது
உலகிலேயே முதல் நாடென்று சரித்திரம் படைத்தது
இசுரோவுக்கு கிடைத்த வெற்றி மூன்றாவது முயற்சியில்
முதலில் சந்திராயன் 1 நிலவை சுற்றியதோடு நின்றது
இரண்டாவது சந்திராயன் 2 நிலவைத் தொடத் தவறியது
மூன்றாவது சந்திராயன் 3 துல்லியமாய்த் தரை இறங்கியது
இசுரோவில் பணியாற்றும் விஞ்ஞானிகள்
ஈடில்லாப் பெருமை சேர்க்கும் வித்தகர்கள்
அளப்பரிய ஆற்றல் கொண்ட மேதைகள்
அயராது கடினமாக பாடுபடும் அறிவாளிகள்
இசுரோவின் பணி இத்தோடு ஓயவில்லை
ஆதவனை ஆராயும் பணியும் தொடர்கிறது
இசுரோ தமிழர்களை இருகை கூப்பி வணங்குவோம்
இனிமேலும் வெற்றி பெற நாம் வாழ்த்துவோம்
***************************