Monday, January 27, 2020

26.1.2020 - கவியரங்கம் - அறிவியலை கணிதத்தை அனைவ ருக்கும் - மா.க.பே


26.1.2020 அன்று மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் 
மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில், அதன் தலைவர் 
கவிமாமணி சி .வீர பாண்டியத் தென்னவன் தலைமையில் நடந்த கவியரங்கம் .முன்னிலை செயலர் கவிஞர் இரா .இரவி 
தலைப்பு: அறிவியலை கணிதத்தை அனைவ ருக்கும்
           அருந்தமிழில் ஆங்கிலத்தில் பயிற்ற வேண்டும் 


அன்று கவிஞர்கள் பாடிய சில கவிதைகள் 

அறிவியலை கணிதத்தை அனைவருக்கும்
அருந்தமிழில் ஆரம்பத்திலேயே பயிற்றுவிக்க வேண்டும்
           கவிஞர் இரா. இரவி.

                        ******
ஆரம்பக்கல்வியை அழகுதமிழில் தாருங்கள்
அது குழந்தைக்கு அறிவுத்திறன் வளர்க்கும் பாருங்கள்
தானாக சிந்திக்க உரம் தரும் நம் தமிழ்
தன்னம்பிக்கையை வளர்த்து வளம் தரும் நம் தமிழ்
 


தமிழ்வழிக் கல்வி தாய்ப்பாலாகும் அறிந்திடுக
தமிழ் தவிர மற்றமொழி புட்டிப் பாலாகும் அறிந்திடுக
தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டு
தமிழ்வழிக்கல்வியில் அறிவு வளர்க்கும் சக்தி உண்டு
 


ஆரம்பக்கல்வி தாய்மொழியிலேயே வேண்டும் என்று
அண்ணல் காந்தியடிகள் அன்றே உரக்க உரைத்தார்
இரவீந்திரநாத் தாகூரும் அன்றே உரைத்தார்
என்றும் இனிமை நிறைந்தது தாய்மொழியே என்று
 


அறிவியல் அறிஞர்கள் பலரும் பயின்றது
அவரவர் தாய்மொழியில் ஆரம்பக்கல்வி இருந்தது
தமிழே அறியாமல் வேறுமொழி அறிவது என்பது
தன்விழிகள் மூடி முகமூடி அணிவது போலாகும்
 


சொந்தப் பார்வையாக தமிழ்மொழி இருக்கையில்
சொத்தைக் கருப்புக் கண்ணாடியாக பிறமொழி எதற்கு?
எல்லா வளமும் தமிழ்மொழியில் உண்டு
எல்லா அறிவும் தமிழ்மொழியில் உண்டு


உலகின் முதன்மொழி தமிழ் உணர்ந்திடுங்கள்
உங்கள் குழந்தைக்கு தமிழ்மொழியைக் கற்பியுங்கள்
கணிதம் அறிவியல் அனைத்துப் பாடங்களும்
கன்னித்தமிழில் கற்பித்தால் அறிவு வளரும்


ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை
உருப்படியாக உன்னதத் தமிழை மட்டும் கற்பியுங்கள்
ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் பயிலட்டும்
ஆரம்பத்திலேயே ஆங்கில நச்சு கலக்க வேண்டாம்
 


தமிழ்நாட்டில் தமிழ் படிக்க கெஞ்சும் நிலை
தமிழருக்கு அவமானம் தரும் அவல நிலை!
  
                              **************

  அறிவியலைக் கணிதத்தை அனைவருக்கும்,
                   அருந்தமிழில் ஆங்கிலத்தில் பயிற்ற வேண்டும்!
                    கவிஞர் முருகனடிமை, இராம.இராமநாதன்,
அறிவியலைக் கணிதத்தை அனைவருக்கும்,
அருந்தமிழில் ஆங்கிலத்தில் பயிற்ற வேண்டும்!
கருதி இதைக் கவனமுடன் நாமும் செய்தால்,
கணக்கற்ற நன்மைபல, நம்மினத்தைச் சேரும்.

மேலான அறிவியலைக் கணிதத்தை,
மேல்நாட்டோர் முறையாக அறியும் முன்னே,
சீராகப் புரிந்துகொண்டான், நம்
சிங்கத்தமிழன்!

பிற மொழிகள்  பயின்றா அன்று தமிழன் ,
திரைகடல் தாண்டித் திரவியம் தேடினான்?
அலைபாயும் ஆற்றில் அணைகள் கட்டினான்?
கோயில்களும் கோட்டைகளும் உருவாக்கினான்?

பாமாலை புனைய மட்டுமா
பைந்தமிழ்?
பல்கலையும், அறிவியலும் பாங்கான கணிதமும்,
பயிலத்தானே
இருக்கிறது இயற்றமிழ்!

புரிந்துகொள்ளச் செந்தமிழும், புரிந்ததை உலகம்
அறிந்துகொள்ள ஆங்கிலமும் போதுமடா தமிழனுக்கு!
தாய்ப்பால் அருந்தாமல் வளரும் பிள்ளை,
சவலையாய்ச் சுணங்கிடும்,அறிவீர் மக்காள்!

தாய்மொழி பயிலாமல் வளரும் பிள்ளையும்
தரணிதனில் உயர்ந்து நிற்றல், இல்லை,இல்லை!
வாய் மொழியாய்ச் சொல்லவில்லை,இதனை-
வரலாறு சொல்லுகிற உண்மை!-உணர்வீர்!!

கவிஞர் முருகனடிமை,
இராம.இராமநாதன்,
9486781925.






அறிவியலை கணிதத்தை அனைவ ருக்கும்
அருந்தமிழில் ஆங்கிலத்தில் பயிற்ற வேண்டும்
                   புதுக்கவிதை 
              மதுரை கங்காதரன் 

உலகம் சிறந்திட அறிவியலறிவு வேண்டும்
அறிவியலே வாழ்வினை மலர்ந்திடச் செய்யும்
கட்டமைப்பு ஓங்கிட கணிதமறிவு வேண்டும்
கணிதமே பொருளாதாரத்தை உயர்த்திடச் செய்யும்

அறிவியலும் கணிதமும் மனிதனின் இருகண்கள்
அஃதால் பெற்றிடும் அறிவோ இருமடங்குகள் 
ஆங்கிலமும் தமிழும் தமிழனின் இருவிளக்குகள்
இரண்டிலும் கற்றால் பெறுவோமே இருசெல்வங்கள்

இருகுழல் துப்பாக்கி எதிரிகளை அழிக்கும்  
இருமுனை கத்தி எத்திசையும் தாக்கும் 
இருபாட அறிவு எதையும் சாதிக்கும்
இருமொழிக் கல்வி விண்ணையும் தொடும்  

தமிழைப் படித்தால் தமிழர் மானம் நிற்கும்  
தமிழைத் தவிர்த்தால் தமிழர் அடையாளம் போகும் 
ஆங்கிலத்தைப் படித்தால் வாழ்வின் நிலை உயரும் 
ஆங்கிலத்தைத் தவிர்த்தால் தமிழனின் நிலை வீழும்.

காந்தமின் இருதுருவங்கள் இரும்பைக் கவர்ந்திடும்   
கணிதமும் அறிவியலும் காந்தமாய் மாறிடும்     
ஆங்கிலமும் தமிழும் இருதுருவமாய் விளங்கிடும்    
அனைவரையும் கவர்ந்து அகிலமே போற்றிடும் .
                                 **************************

அன்று நடந்த நிகழ்ச்சியின் மின்படங்கள் 

 
 

















 



****************



Saturday, January 11, 2020

தாய்மொழி தினவிழா அழைப்பு - மா.க.பே - கவியரங்கம் -16.2.2020


மாமதுரைக் கவிஞர் பேரவையின்  
தாய்மொழி தினவிழா அழைப்பு - 
கவியரங்கம் -16.2.2020






அனைவரும் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்துத் தருமாறு 
உங்களை மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பாக
 அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 
நன்றி 
*********