Monday, August 27, 2018

26.8.18 மாமதுரைக் கவியரங்கம் - தமிழ்நாடு ஐம்பது தான் . தமிழ்மொழிக்கு ?

26.8.18 மாமதுரைக் கவியரங்கம் - 
தமிழ்நாடு ஐம்பது தான் . தமிழ்மொழிக்கு ?  
கவியரங்கக் கவிதைகள் - மின்படங்கள்   



தமிழ்நாடு ஐம்பதுதான் தமிழ்மொ ழிக்கு? (26.8.2018)

தமிழ்மக்கள் வாழுமிடம் தமிழ்நாடு என்றே
     தாமழைக்க வேண்டுமென தவித்திட்டார் அன்றே  
அமிழ்தமென சுவைக்கின்ற அழகுதமிழ் அண்ணா
     அறுபத்தி எட்டினிலப் பெயர்சூட்டச் சொன்னார்
குமுதமலர் மலர்ந்ததென கோலோச்சி நின்றார்
     கொற்றவனாய் தமிழ்நாட்டின் கொடிநாட்டி வென்றார்
இமியளவு நமக்கிருந்த ஏக்கமதை வென்றோம்
     இன்பமழை பொழிகின்ற இருமாப்பில் நின்றோம்!

சென்னையெனச் சொல்லிவந்த சின்னமொழி மாற்றம்
     அன்னைதமிழ் புகழ்பாடும் அத்தனையும் தோற்றம்
சொன்னபடி ஒன்றாக சூளுரைத்துக் கொண்டோம்
     சொன்னபடி தமிழ்நாடு சுடர்விடவே கண்டோம்
திண்ணையிலும் அன்றுமுதல் தேன்தமிழில் பேச்சு
     திக்கெட்டும் பரவியது திராவிடத்தின் வீச்சு
அன்னைதமிழ் தோன்றியநாள் யாரறிவார் இங்கே
     ஆயிரம்ஈ ராயிரமென் றறைவதுநம் பங்கே!

வயதாலே மூத்தமொழி வையகமே போற்றும்
     வள்ளுவரின் குறளொன்றே வளமொன்றை சாற்றும்
தயவேதும் பாராமல் தண்டமிழின் தோற்றம்
     தரணியிலே யார்கணிப்பார் தமிழனுக்கே ஏற்றம்  
பயமேதும் இனியில்லை பைந்தமிழைப் போற்றி
     பாரிணிலே வீறுநடை போட்டிடலாம் மாற்றி
அயராது தமிழ்வாழ அனைவருமே ஒன்றாய்
     அன்னைதமிழ் வளம்காத்து அறம்காப்போம் நன்றே!   
             
       முனைவர் இரா. வரதராசன்
**************************************************
   மாமதுரை கவிஞர் பேரவை
நடத்திய மாதாந்திர கவியரங்கம்

அன்னைத் தமிழுக்கு வணக்கம்.
என்னைப் பெற்றெடுத்து
இப்பூஉலகில் தவழவிட்ட
பெற்றோருக்கு வணக்கம்
கவிதைத் தலைமகனாம் அய்யா
தென்னவர்க்கு வணக்கம்
தமிழ்நாட்டுப் பெயருக்கு
தன்னுயிரைஈந்திட்ட
சங்கரலிங்கனார்க்கு வணக்கம்
தமிழ்நாடென்ற பெயர்தந்த
பேரறிஞர்அண்ணாவிற்கு வணக்கம்.

தமிழ்நாடு ஐம்பதுதான் தமிழ் மொழிக்கு?!
தமிழ்நாட்டிற்கு வயதுஐம்பது
தமிழக்கோ வயதில்லை.
அவள்முன்தோன்றி மூத்தகுடி.
முச்சங்கம் கண்டகுடி.
மூவேந்தர் வளர்த்த குடி.
இலக்கணங்கள் இலக்கியங்கள்
இன்ன பிற நூல்களெல்லாம் யாத்தகுடி.
என்றைக்கும் புதுமலராய்பூத்த குடி.

கற்பூரப் பெட்டகமாய்
காலமெல்லாம் மணக்கும் தமிழ்.
கற்கண்டாய் கனிச்சாறாய்
கன்னலென இனிக்கும்தமிழ்.
நல்ல தமிழ் நான் படித்தே
நாளெல்லாம் தொகுத்திடுவேன்.
பாரெல்லாம் கொண்டுசென்று
பகிர்ந்திடுவேன் தமிழ்ப்பெருமை.

ஆறெல்லாம் ஓடுகின்ற நீர் போல
ஊரெல்லாம் பெருக்கெடுக்கும்
உயர் தமிழே  உயிர்த்தமிழே.
உனக்கு இன்னலொன்று வந்திட்டால்
இளைய மகன் நான் வருவேன்.
இன்னுயிரைத் தந்தேனும்
இனிய தமிழ் காத்திடு வேன்.
தயங்காதே தமிழ்த்தாயே   மயங்காதே
என்போன்ற தமிழ் மகன்கள் இருக்கும்வரை.


             











அ.சுப்ரமணியன்
*********************************************************************************

தமிழ்நாடுக்கு ஐம்பது... தமிழ்மொழிக்கு ....?

மாந்தர் முதலில் தோன்றிய இலெமூரியாக் கண்டம்
மரத்தமிழன் பிறந்த இடமானக் குமரிக்கண்டம்
அன்றே தமிழ்மொழியின் வரலாறு தொடக்கம்
இன்றோ தமிழ்மொழி வேதனையின் துவக்கம்.

இறைவனின் பிறப்பை அறிவார் உண்டா?
அருந்தமிழ் பிறப்பும் அவ்வாறு போன்றே.
அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப் பெற்ற ஆதாரங்கள்
அன்னைத்தமிழின் அகவை முதிர்ச்சி அடையாளங்கள்

கிமு ஐந்தாயிரத்தில் முதற்சங்கம் உதித்தது
கிமு மூவாயிரத்தில் இடைச்சங்கம் வளர்ந்தது
கிமு ஆயிரத்து ஐநூறில் கடைச்சங்கம் மலர்ந்தது
கிரேக்கம் லத்தீன் தமிழுக்குப் பின்னே வந்ததே.

தோண்டத்தோண்ட பூமியின் அடி கிட்டாது
பறக்கப்பறக்க வானத்தின் முடி எட்டாது
ஆராய ஆராயத் தமிழின் முதல்படி அகப்படாது
போகப்போகத் தமிழின் உடும்புப்பிடி விடாது.

காலத்தில் தமிழின் தொன்மை காரணமே
கற்பனைக்கு எட்டாதச் சொற்சுவை கனிமரமே
நாற்பது நாட்டில் பேசும் நல்லத்தமிழ் மொழியே
நற்றமிழ் வளர்ச்சிக்கு நல்லசான்றான நிலையே.

தமிழ் மொழியே உலக மொழிகளின் மூலம்
தரணியில் பல மொழிகள் உருவாகக் காரணம்
கிளைமொழிகள் ஆக்கம் தமிழ்மொழியின் சித்தி
கலை இலக்கியப் பண்பாடு தமிழ்நாகரிகத்தின் சக்தி

கு.கி.கங்காதரன்,  மதுரை. 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


























































































&&&&&&&&&&&&&&&&&&&